Skip to main content

கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை வைத்து லட்சக் கணக்கில் பண மோசடி; ஆசையால் மோசம் போன இளைஞர்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

using keerthy suresh photo as dp women fooled a boy over 40lakh rupees in karnataka

 

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக தற்போது கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம், விஜய்ப்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் இளைஞர் பரசுராமன். இவர் ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிகள் தொடர்பான தேர்வுக்கும் படித்து வருகிறாராம். 

 

இதனிடையே பரசுராமனுக்கு ஃபேஸ்புக்கின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம் கொண்ட ஒரு ஐடியிலிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருக்கிறது. ஆனால் முகப்பு பக்கத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது பரசுராமனுக்கு தெரியவில்லை. வேறொரு பெண் தன்னுடன் நட்பாக வேண்டும் என எண்ணுவதாக நினைத்து அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பு இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். பிறகு அந்த ஐடியிலிருந்து பரசுராமனின் வாட்ஸ் அப் நம்பரை கேட்க, அவரும் கொடுத்துள்ளார். வாட்ஸ் அப்பில் சாட் செய்த பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர். 

 

தான் ஒரு கல்லூரி படிக்கும் இளம்பெண் என்றும், தன் படிப்பிற்காக உதவி செய்யுங்கள் என்றும் அந்தக் காதலி கேட்க, தன் காதலி கேட்பதால் பணம் கொடுத்துள்ளார் பரசுராமன். இதனைத் தொடர்ந்து அடிக்கடி அந்தக் காதலி சில காரணங்களால் பணம் கேட்க மனதுக்கு விருப்பமான பெண்ணுக்குத்தானே கொடுக்கிறோம் என பரசுராமனும் தந்துள்ளார். ஒருநாள் பரசுராமனிடம் அந்தக் காதலி, ஆசை வார்த்தை பேசி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ அனுப்ப சொல்லிக் கேட்டுள்ளார். உடனே பரசுராமனும் அனுப்ப அந்த வீடியோவை அந்தக் காதலி ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். 

 

இதையடுத்து அந்த வீடியோவை வைத்து அந்தக் காதலி பரசுராமனை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் பரசுராமனுக்கு தான் தவறு செய்ததை உணரத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து அந்தக் காதலி பிளாக் மெயில் செய்ய, சுதாரித்துக்கொண்ட பரசுராமன், கடந்த மாதம் 15-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்தக் காதலி ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

மேலும் மஞ்சுளா ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவர் என்றும் இந்த பண மோசடிக்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பண மோசடியில், சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ள மஞ்சுளா அதை வைத்து 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கியுள்ளார். அதோடு வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். மஞ்சுளாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சுளாவின் கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.