இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகளை வென்றது. மேலும் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆவணப்பட பிரிவில் லிட்​டில் விங்ஸ் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. 

இதனிடையே சிறந்த துணை நடிகைக்கான விருது மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ படத்திற்காக ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊர்வசி தேசிய விருது தேர்வு குழுவை கடுமையாகச் சாடியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பல்வேறு கேள்விகளை அடுக்கிய அவர், “விஜயராகவன் நடிப்பையும் ஷாருக்கானின் நடிப்பையும் எப்படி அவர்கள் ஒப்பிடுகிறார்கள். விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? இரண்டிற்கும் இருக்கும் அளவுகோல்கள் என்னென்ன? 

பூக்காலம் படத்தில் விஜயராகவன் நடிப்பை பாருங்கள். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடல் ரீதியாக கடினமான உழைப்பை போட்டிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக அவர் மணிக்கணக்கில் மேக்கப் போட வேண்டும். நானும் அந்த படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் எனது கதாபாத்திரத்துக்கு கடினமான முயற்சி தேவைப்பட்டதால் விலகிவிட்டேன். அதனால்தான் இதை வலியுறுத்துகிறேன். விஜயராகவன் ஒரு மகத்தான நடிகர், குறைந்தபட்சம் ஒரு சிறப்பு ஜூரி விருதாவது அவருக்கு கொடுத்திருக்க வேண்டும்.

நாங்களும் வரி செலுத்துகிறோம், மற்றவர்களைப் போலவே எங்கள் வேலைகளைச் செய்கிறோம். தேர்வு குழுவை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆடுஜீவிதம் படத்தை அவர்கள் ஏன் எந்த பிரிவிலும் சேர்க்கவில்லை. நஜீப்பின் வாழ்க்கையையும், அவரது வேதனையான துயரங்களையும் வெளிப்படுத்த, உடல் ரீதியாக ஒரு மாற்றத்தை கொடுத்த நடிகர் இங்கு இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்காமல் புறக்கணித்தது, அவர் இயக்கிய எம்புரான் படத்தால் தான் என எல்லாருக்கும் தெரியும். எனது சொந்த தமிழ் படமான ஜே.பேபி படமும் புறக்கணிக்கப்பட்டது. இந்த படத்தை ஜூரி பார்த்தார்களா கூட எனக்கு தெரியவில்லை. 

Advertisment

சிறந்த நடிகைக்கான விருது ஏன் பகிரப்படவில்லை? யாரையும் நான் குறை சொல்லவில்லை, ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும். இதை ஓய்வூதியம் பெறுவது போல் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையிலேயே சரியானதாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ள முடியும். மத்திய  இணை அமைச்சர் சுரேஷ் கோபி போன்ற ஆட்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தர வேண்டும்.
மத்திய அரசும் மாநில அரசும் விருது குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த விருதுகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.” என்றார். முன்னதாக தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது கொடுத்ததற்காக தேசிய விருது குழுவை கடுமையாக வெறுப்பை விதைக்கும் படத்திற்கு சட்ட அங்கீகாரமா என சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.