கன்னட பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான உபேந்திரா கடைசியாக தமிழில் வெளியான ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது கன்னடத்தில் ஏகப்பட்ட படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் உபேந்திரா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது ஃபோனும் தனது மனைவியின் ஃபோனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு பேசுகையில், “முதலில் எனது மனைவிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய வேண்டும் என்றால், சில ஹேஷ்டேக்குகள் மற்றும் எண்களை சொல்லுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அந்த நம்பருக்கு கால் செய்தோம்.
பின்பு என் ஃபோனில் இருந்தும் கால் செய்தோம். இப்போது இரண்டு பேரின் ஃபோனும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. அதனால் என்னுடைய நம்பர் அல்லது எனது மனைவியின் நம்பரில் இருந்தோ எதாவது பணம் கேட்டு மெசெஜ் வந்தால் தயவு செய்து யாரும் பணம் அனுப்பிவிடாதீர்கள்” என்றார். இது தொடர்பாக உபேந்திர தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.