this is Unreal Actor Nivin Pauly Explains About Complaint

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியைக் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்றபடி இந்த விவகாரம் சட்டப்படி கையாளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமான நிவின் பாலி பின்பு ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்ட நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.