‘ராஜா கிளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகனவர் நடிகர் உமாபதி ராமையா. இப்போது அவரது தந்தையான நடிகர் தம்பி ராமையாவுடன் மீண்டும் இணைந்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். படத்தின் கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்க, மகன் உமாபதி இயக்குகிறார்.கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 3, 2025) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
புரொடக்ஷன் நம்பர் 6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன்,விஜே ஆண்ட்ரூஸ், சத்யன், சாம்ஸ், கிங்காங், தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குநர் உமாபதி ராமையா கூறியதாவது, “திரைத்துறையின் மேல் அளவில்லாத ஆர்வமுள்ள கண்ணன் ரவி சார் உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது அமையும். நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. சில நிமிடங்கள் கதையைச் சொன்னவுடனேயே அவர் சம்மதித்தது எனக்கு பெரும் திருப்தியையும், இந்தக் கதையை அப்படியே திரையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பையும் அளித்தது. இன்று படப்பிடிப்பைத் துவக்கி விட்டோம், விரைவில் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.