udhayanidhi stopped mari selvaraj speech at maamannan success meet

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர்.

இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மாரி செல்வராஜ் பேசுகையில், "என்னை அங்குலம் அங்குலமாக செதுக்கியவர் ராம் சார் தான். என்னுடைய எல்லா பலவீனங்களையும் உடைத்தார். மொத்தம் 15 வருஷம் அவருடன் பயணித்துள்ளேன். அவர் தான் எனக்கு ஆசான். நான் என்றைக்குமே ஒரு படம் வணிக ரீதியாக ஜெயிக்க வேண்டும் என விரும்பமாட்டேன். ஆனால் அது தேவைப்படுகிறது. அதைத்தாண்டி இந்த மாதிரி கதைகளை எடுக்கும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் என்ன பேசினாலும் வீண் தான்.

இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் அடுத்து வருபவர்களிடம் இருந்துஇன்னும் ஆக்ரோஷமாகசமூக நீதிக்கு தேவையான கதைகள் வரும். இது போன்ற படைப்புகள் தோல்வியடைந்தால் அந்த கலைஞனுக்கு பெரிய வலியை கொடுத்துவிடும். என்னுடைய மூன்று படத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் சார் பாராட்டியிருக்கிறார். அதே போல் தான் ரஜினி, கமல் சாரும். நான் போகும் பாதையில் பெரிய நம்பிக்கை கொடுத்தது இது போன்ற மனிதர்கள் தான்..." என தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த உதயநிதி விளையாட்டாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டார்.