Udhayanidhi Stalin

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான டான் திரைப்படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா அண்மையில் நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “டான் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். டாக்டர் படத்தைவிட மிகப்பெரிய வெற்றியை டான் பெறும் என்று ஆடியோ லான்ச்லயே நான் சொன்னேன். அது நடந்துவிட்டது. படம் வெற்றிபெற்றுவிட்டது என்பதால் நிறைய உண்மைகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். முதலில் நானும் இன்னும் மூவரும் படம் பார்த்தோம். இடைவேளைவரை பார்த்துவிட்டு உனக்கு சிரிப்பு வந்ததா, உனக்கு சிரிப்பு வந்ததா என மாறிமாறி கேட்டுக்கொண்டோம். ஆனால், இரண்டாம் பாதி பார்த்த பிறகு கடைசி ஒரு மணி நேரத்திற்காகவே இந்தப் படம் ஓடும் என்ற நம்பிக்கை வந்தது. அப்பா-பையன் செண்டிமெண்டிற்காக இந்தப் படம் நிச்சயம் ஓடும் என ஆடியோ லான்ச்சில்கூட சொன்னேன். நாங்கள் நினைத்தது மாதிரியே தமிழ்சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியுள்ளார்கள்.

Advertisment

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை சிபி எனக்குத்தான் முதலில் சொன்னார். இந்தக் கதை எனக்கு சொல்லப்பட்ட கதை என்பதையே நான் மறந்துவிட்டேன். என் நண்பன் ஒருவன் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வந்தது. எனக்கு கதை பிடித்திருந்தாலும் பள்ளி காட்சிகள் என்னால் பண்ண முடியாது என்பதால் நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டேன். நல்லவேளை நான் நடிக்கவில்லை. நிச்சயம் சிவகார்த்திகேயன் நடித்த மாதிரியெல்லாம் என்னால் நடித்திருக்க முடியாது. அப்பா- மகன் செண்டிமென்ட் எமோஷனெல்லாம் எனக்கு சுத்தமாக வந்திருக்காது. யார் யாரிடம் சென்று சேர வேண்டுமோ அவர்களிடம் இந்தப் படம் சென்று சேர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.