udhayanidhi stalin appreciate mari selvaraj vaazhai

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தன. திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜைப் பாராட்டினர். இதையடுத்துரஜினிகாந்த் வாழை படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.

Advertisment

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். இப்படத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!‘திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரியின் கலை மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு குட்டி பன்றி சிலையை பரிசாக அளித்தார்.

அமைச்சர் உதயநிதியின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட மாரி செல்வராஜ், “வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் . இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வாழை படத்தை அமைச்சர் உதயநிதிதான் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக இருவரும் இணைந்து மாமன்னன் படத்தில் பணியாற்றினார்கள். இப்படம் உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment