தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகி வருகிறது ‘இட்லி கடை’ படம். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இருந்து இதுவரை ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி தந்தானே’ என இரண்டு பாடல்கள் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. இப்படம், அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி இப்படத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தனுஷ், புது பயணத்தைத் தொடங்கிய இன்பன் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இப்படத்தை வெளியிடுவதன் மூலம் சினிமாவில் விநியோகஸ்தராக இன்பநிதி என பலராலும் அழைக்கப்படும் இன்பன் உதயநிதி காலெடி எடுத்து வைக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதியின் மகனான இவர், லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப் படிப்பை முடித்துள்ளார். பொதுவெளியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் இன்னும் சில திமுக கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருந்தார். இவருக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நிதி நிர்வாகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிப்புக்காக அவர் பயிற்சி பெற்று வருவதாக கூத்துப்பட்டறையில் அவர் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் அவர் விநியோகஸ்தராக அவதாரம் எடுத்துள்ளார். விரைவில் நாயகனாகவும் அவதாரம் எடுப்பார் என திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணை முதல்வர் உதயநிதியால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டது. இதில் உதயநிதி நடித்த படங்களும் அடங்கும். பின்பு அவர் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இருப்பினும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின்பு அவர் அமைச்சரான பிறகு அவர் பெயர் நீக்கப்பட்டு அவரின் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் செயல்பட்டு வந்தது. இப்போது இருவரின் மகனான இன்பன் உதயநிதி பெயரில் செயல்படுகிறது.