பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் ஏ. எல். உதயா பேசுகையில், “பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன். என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது. இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் திரையரங்கில் மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம். இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது” என்றார்.