
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திடீரென இந்தியாவில் உயரத்தொடங்கியுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு மாறியுள்ளது இந்தியா.
இந்நிலையில், பிரபல டிவி சீரியல் நடிகையும், உத்தரகாண்ட் மாநில அமைச்சரான சத்பாலின் மகளுமான மேஹனா குமாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோஹனாவின் தந்தை, கணவர், மாமியார் என அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மோஹனா தெரிவிக்கையில், “எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் நலமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். என்னுடைய மைத்துனருக்கு தற்போது கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. எங்களுக்கு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்தது. வானிலை மாற்றத்தால் அப்படி இருக்கிறது என்று முதலில் நாங்கள் நினைத்தோம். யாருக்கும் பெரிய அளவில் அறிகுறிகள் தென்படவில்லை.
கரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவுகிறது. என் மாமியாருக்கு தான் முதலில் தொற்று ஏற்பட்டது ஆனால் அறிகுறிகள் இல்லாததால் எங்களுக்கு அது தெரியவில்லை. மருத்துவமனையில் இது எங்களுக்கு இரண்டாம் நாள். எங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.