விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்ரீ அஷ்டலிங்க ஆதிஷே செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த்ரிஷா இயந்திர யானை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை அவர் பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வழங்கியுள்ளார்.
இயந்திர யானைக்கு கஜா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை சுமார் 3 மீட்டர் உயரம், 800 கிலோ எடை கொண்டதாக அமைந்துள்ளது. மேலும் தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்ச ரூபாய் செலவில் இந்த யானை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலங்குகள் துன்புறுத்துவதை தடுக்க இது போன்ற முன்னெடுப்புகள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
கஜா யானையின் அறிமுக நிகழ்ச்சி நேற்று கோவிலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் டிஎஸ்பி மதிவாணன் யானையை த்ரிஷா மற்றும் அந்த தன்னார்வ அமைப்பு சார்பாக கோயிலுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள், கஜா யானையை பார்த்து ஆச்சர்யப்பட்டு ஆசீர்வாதம் வாங்கி சென்றனர். த்ரிஷாவை போலவே நடிகை பிரியாமணியும் கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் ‘மகாதேவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இயந்திர யானையை பீட்டா அமைப்புடன் இணைந்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.