
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியாக இருந்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தை ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக எப்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும், சினிமா ஷூட்டிங்கிற்கு எப்போது அனுமதி வழங்கப்படும் போன்ற விஷயங்கள் தெரியாததால், ஏற்கனவே முழுதாக முடிக்கப்பட்டு, ரிலீஸுக்குத் தயாராக உள்ள படங்களை டிஜிடல் முறையில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் குறித்து தயாரிப்பாளர் விமர்சித்தது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாகப் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபமாகத் தயாரிப்பாளர்கள் அனைவருமே OTT இல் படங்கள் வெளியாவது எங்கள் உரிமை எனப் பேசுகிறீர்கள். தாணு சார், சிவா சார் தொடங்கி அனைத்து நண்பர்களுமே இதைத் தான் பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்கள். எத்தனை மேடைகளில் எத்தனை தயாரிப்பாளர்கள் சிறு படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தரவில்லை எனப் பேசியிருப்பீர்கள்.
அப்போது என்ன படம் போடுவது, போடாதது அவர்கள் உரிமை என்று தெரியவில்லையா. இஷ்டப்பட்டால் போடட்டும் இல்லையென்றால் விட்டு விடட்டும் என விட்டிருக்கலாமே நீங்கள். ஏன் மேடைகளில் அவ்வளவு பேசினீர்கள்?. அப்படியெல்லாம் பேசியிருக்கவே கூடாது. திரையரங்க உரிமையாளர்கள் காட்சி கொடுப்பதும், கொடுக்காதது அவர்களுடைய விருப்பம் என்று அல்லவா பேசியிருக்க வேண்டும். நாங்களாவது ஒரு காட்சி, 2 காட்சி கொடுத்தோம். டிஜிட்டல் நிறுவனத்தில் சதவீத அடிப்படையில் கொடுத்தீர்கள் என்றால், உங்களுடைய படம் எங்கிருக்கும் என்றே தெரியாது.
அதே போல் திரையரங்க உரிமையாளர்கள் சரியாகக் கணக்கு கொடுப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், டிஜிட்டல் முறையில் போய் நீங்கள் கணக்குக் கேளுங்கள். அவர்கள் எப்படிக் கணக்குக் கொடுக்கிறார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்கிறோம். அவர்கள் என்ன டைப் செய்து கொடுக்கிறார்களோ அது தான் கணக்கு. மொத்தமாக விற்றுவிட்டால் வேண்டுமானால் அமைதியாக இருந்துக் கொள்ளலாம்.
திரையரங்கில் படம் ஓட்டி பேமஸ் ஆக்கிக் கொடுத்த படங்களை மட்டுமே டிஜிட்டல் நிறுவனம் விலைக்கு வாங்குவார்கள். மீதி அத்தனை படங்களையும் சதவீத அடிப்படையில் தான் போடச் சொல்வார்கள். மறுபடியும் சொல்கிறேன். 'பொன்மகள் வந்தாள்' படம் டிஜிட்டலில் வெளியிட்டதற்கு வருத்தப்பட்டதற்கு ஒரே காரணம். மூன்று மாதங்களாகப் படப்பிடிப்பு இல்லை. இருக்கும் படங்களை டிஜிட்டலில் விற்றால், நான் திரையரங்குகளைத் திறக்கும் போது என்ன படம் போடுவது.

நஷ்டம் என்பது அனைத்து தொழிலுக்கும் உள்ளது. நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு தான் நாங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய நிறுவனம் அவர்களுடைய படத்தை 3 மாதம் கழித்து வெளியிட்டால் பணம் வரப்போகிறது. அவர்கள் கொடுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் தான் சொன்னாமே ஒழிய, தனிப்பட்ட பகை எதுவுமே இல்லை. திரையரங்கைத் திறந்தால் போடுவதற்குப் படமில்லை என்ற ஆதங்கத்தில் தான் பேசினோம். அதை வைத்துக் கொண்டு கடந்த 4 நாட்களாகத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
அதுமட்டுமன்றி, பாப்கார்ன் 100 ரூபாய்க்கு விற்கிறார்கள், டிக்கெட் அதிகவிலைக்கு விற்கிறார்கள் என மேடையில் எவ்வளவோ விஷயம் பேசுகிறீர்கள். இனிமேல் மேடையில் நீங்கள் வாயைத் திறந்து பேசுங்கள். திரையரங்கில் யாரேனும் முதலீடு செய்துள்ளீர்களா. நான் முதலீடு போட்டு கட்டியிருக்கும் திரையரங்கில் விற்கும் பாப்கார்னுக்கு முதலமைச்சர் வரை போய் புகார் கொடுத்தீர்கள்.
இனிமேல் பாப்கார்ன் விலை, பார்க்கிங் கட்டணம் என யாராவது பேசினீர்கள் என்றால், நாங்களும் பின்பு கடுமையாகப் பேச வேண்டியதிருக்கும். உரிமை உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் சொந்தம். திரையரங்கை நாங்கள் முதல் போட்டுக் கட்டியுள்ளோம். அதில் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது எல்லாம் எங்களுடைய உரிமை. நீங்கள் முடிவு செய்தது போல் நாங்களும் முடிவு செய்துகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.