Advertisment

காலத்தை பிரதிபலித்த காதல் படங்கள்... தாடிக் காதல் முதல் லிவ்-இன் வரை... 

films

தமிழ் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் புராண கதைகளையே மையமாகக் கொண்டு படங்கள் வெளிவந்தன. 1960களுக்கு பின்னர் தான் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ப காதல் படங்கள் வர ஆரம்பித்தன. அவற்றில் அந்தந்த காலத்தின் பிரதிபலிப்பாய் வெளிவந்து காதலின் பல கோணங்களைக் காட்டிய படங்கள் என்னென்ன என்பதை பாப்போம்....

Advertisment

oru

ஒரு தலை ராகம்

1980 ல் வெளிவந்த படம். அதுவரை தமிழ் சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் பார்த்துக் கொள்வர், பேசி கொள்வர், பழகி கொள்வர் உடனே இருவருக்குள்ளும் காதல் அரும்பிவிடும். இப்படியான படங்கள் வெளிவந்த சமயத்தில் முதன் முதலாக அன்றைய காலகட்ட எதார்த்த காதலை அருமையாக வெளிக்கொண்டு வந்த படம். முற்றிலும் புது முகங்களால் எடுக்க பட்ட இப்படத்தில்காதலிப்பவர்கள் இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ள மாட்டார்கள். இருந்தும் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கும். ஒரு கட்டத்தில் நாயகி தன் காதலை நாயகனிடம் சொல்ல முற்படும் சமயத்தில் அவன் இறந்து விடுவான். பெரும்பாலும், தன் காதலை ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்தினால், அவள் எங்கு நம்மை விட்டுவிட்டு போய் விடுவாளோ, பேசமாட்டாளோ என பயந்து தன் மனதோடு வைக்கும் அந்தக் கால இளைஞர்களின் மனநிலையை அழகாக காட்டியிருப்பார் டி.ராஜேந்தர். ஒரு தலை காதலில் தாடி வைப்பது, சோக பாடல்கள் கேட்பது, எப்போதும் அமைதியாக இருப்பது என இவர் காட்டிய விஷயங்கள் தமிழக இளைஞர்களின் கலாச்சாரமாகவே பல ஆண்டுகள் இருந்தன.

Advertisment

moo

மூன்றாம் பிறை

காதலுக்கு கண் இல்லை, அது எப்போது வேண்டுமானாலும், யார் மீதும் ஏற்படும் என்று உண்மையை சொன்ன படம். இருமனம் புரிதலோடு சேர்ந்தால் மட்டுமே காதல் என்பது இல்லை, ஒருவர் மனநிலை சரி இல்லையென்றாலும் அவர்களை அனுசரித்து நமக்குக் காதல் வரும் என்பதை காட்டிய படம். மன நலம் குன்றிய ஸ்ரீ தேவியுடன் காதல் கொள்ளும் கமல் கடைசியில் அந்தக் காதலால் மனநலம் பாதிக்கப்படுகிறார். ஒரு காதல் எந்த அளவிற்கு ஒருவனுடைய வாழ்க்கையை புரட்டி போடுகிறது என்பதை அழகாகக் காட்டியிருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா.

mau

மௌனராகம்

ஆண்களுக்கு மட்டும் தான் காதல் தோல்வி உண்டா...? ஏன் பெண்களுக்கு தோல்வி வராதா..? என்ற கேள்விக்கு நல்ல பதிலாய் வந்த படம் தான் இந்த மௌனராகம். கார்த்திக்குடன் காதல் தோல்வி அடைந்த ரேவதி பின்னர் எப்படி மணமுடித்த மோகனுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார் என்பதை எதார்த்தமாகக் காட்டியிருப்பார் மணிரத்னம். காதல் தோல்வி அடைந்த பெண் திருமணத்திற்கு பின், தன் முன்னாள் காதலனையும் மறக்க முடியாமல், அதன் பின் மணமுடித்த கணவனையும் ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பை கவித்துவமாகக் காட்டிய படம். இந்தப் படத்தில் கார்த்திக் நடித்த பாத்திரம், இன்றும் இளைஞர்களின் குறிப்பாக இளம் பெண்களின் ஃபேவரிட்டாக இருக்கிறது.

id

இதயம்

காதலில் பெரும்பாலான நடுத்தர இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மை கொண்ட மனநிலையை அருமையாக காட்டிய படம். நாம் இருக்கும் தோற்றத்திற்கு நம் காதலை இவளிடம் சொன்னால் எப்படி ஏற்று கொள்வாள்..., அப்படி சொல்லி அவள் நம்மிடம் பேசாமலே போய்விட்டால்...., இல்லை நம்மை வேண்டாம் என்று நிராகரித்தால்..., என்ன செய்வது...? இம்மாதிரியான கேள்விகளுக்கு, இளைஞர்கள் விடை தெரியாமல் தன் காதலை எப்படி கடைசிவரை யாரிடமும் சொல்லாமல் தன் மனதோடு பூட்டிக் கொண்டு புழங்குவதை எளிமையாகவும், அழகாகவும் காட்டிய படம். அனைவரது நட்பு வட்டத்திலும் இப்படியாக பட்ட ஒருவன் கண்டிப்பாக இருப்பான். இன்றளவும் ஒருவன் தன் காதலை ஒரு பெண்னிடம் வெளிப்படுத்த தயங்கினால் அவனை இதயம் முரளி என்று அழைக்கும் அளவுக்கு இப்படத்தின் கதாபாத்திரம் நம் வாழ்வோடு ஒன்றி விட்டது.

guna

குணா

காதலிக்கும் பெண்ணை தாய், தந்தை, கடவுள் என இவைகளுக்கு மேலாக நினைப்பவனுடைய காதலை தெளிவாகக் காட்டிய படம். தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பெண்ணுக்காக ஒருவன் என்னவெல்லாம் செய்கிறான். அதுவே அவனுக்கு எந்த அளவு நோயாக மாறுகிறது என்று கூறிய இப்படத்திற்குப் பிறகு தான் சைக்கோ காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு வரிசையாக வந்தன.

bom

பாம்பே

காதலில் சர்வதேச பிரச்சனையான மத பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். முதன்முதலில் ஹிந்து, முஸ்லிம் காதலின் பிரச்சனைகளை விரிவாகக் காட்டிய படம். இடம், பொருள், காலம், இவைகளைத் தாண்டியது தான் காதல். மதம் ஒரு பொருட்டே கிடையாது என்ற விஷயத்தை இதற்கு முன் சில படங்கள் சொல்லி இருந்தாலும் இதில் முதன்முதலாக ஹிந்து, முஸ்லிம் காதலை பேசியதன் மூலம் மணிரத்னம் பல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

kadh

காதல் கோட்டை

கதாநாயகனும், கதாநாயகியும் பார்க்காமலே காதலிக்க முடியும் என்று அதுவரை சிறிதும் சிந்தித்திராத கோணத்தில் வந்த படம். காதல் என்பது அழகான உணர்வு மட்டுமே, அதற்கு இரு பாலரும் பார்க்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறி புது சரித்திரம் படைத்த படம். இதற்கு மகுடம் சூட்டுவது போல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

sol

சொல்லாமலே

அந்த சமயத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் காதலுக்காக படிப்பு, குடும்பம், சொந்தம் பந்தம், ஏன் உயிர் விடுவதை கூட காட்டியிருக்கிறார்கள். ஆனால் முதன்முதலாக காதலுக்காக தன் நாக்கையே ஒருவன் இழப்பதை காட்டிய படம். கதாநாயகியை ஊமை என நினைத்து கதாநாயகன் தானும் ஊமையாய் நடிக்கிறான். சில நாட்கள் கழித்து அவள் ஊமை அல்ல என்று தெரியவரும் வேளையில் தன் தாழ்வு மனப்பாண்மை காரணமாக அவளிடம் ஊமையாகவே நடிப்பதைத் தொடர்கிறான். இப்படியே இருவரும் பழகி காதல் கொள்ளும் வேளையில் எங்கே நம் உண்மை தெரிந்து இவள் நம்மை விட்டுவிடுவாளோ என்று எண்ணி உண்மையாகவே ஊமையாக, தன் நாக்கையே வெட்டிக் கொள்கிறான் கதாநாயகன். இப்படி காதலின் ஆழம் ஒருவனை எந்த அளவு கொண்டு செல்கிறது என்பதை அழுத்தமாக சொன்ன படம்.

kath

காதலர் தினம்

முதன் முதலில் காதலை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாகவும் வளர்க்கமுடியும் காண்பித்த படம். கம்ப்யூட்டர்கள் அதிகமில்லாத அந்த காலகட்டத்திலேயே கம்ப்யூட்டரில் ஈமெயில் மூலமாக எப்படி காதல் ஆரம்பமானது என்பதை அழகான காட்சிப்படுத்தலின் மூலம் காட்டிய படம். இப்போது உள்ள வாட்சப், பேஸ்புக் காதல்களுக்கு முதல் புள்ளி வைத்து பிள்ளையார் சுழி போட்ட படம் இது தான்.

alai

அலைபாயுதே

காதலித்து வீட்டில் சம்மதம் வாங்க முடியாமல் பல எதிர்ப்புகளை மீறி ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு, படிப்பு, வேலை, உற்றார், உறவினர்களை விட்டுவிடும் காதல்களை பார்த்து பழகிய காதல் கதைகளுக்கு நடுவில் படிப்பு, வேலை, உற்றார், உறவினர்களை விட்டுவிடாமல் அதே சமயம் நாம் நினைத்தவனோடும், நினைத்தவளோடும் பதிவுத் திருமணம் செய்து வாழ்வதை காட்டிய படம். இப்படி சட்டரீதியான கல்யாணங்களும் பண்ணலாம் அதில் எந்த பிரச்சனையும் இல்லை, இரு மனம் சேர்ந்தால் யாராலும் நம்மை பிரிக்க முடியாது என்ற தைரியத்தை கொடுத்த படம். வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு அவரவர் வீட்டில் வாழ்வதை காட்டி அழகாக ட்ரெண்ட் செட் பண்ணியிருப்பார் மணிரத்னம்.

kushi

குஷி

காதலர்கள் இருவருக்குள்ளும் காதலித்த பிறகு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. காதலில் ஈகோ எப்படி புகுந்து விளையாடுகிறது. அதை எப்படி கையாளவேண்டும், எப்படி பிரச்சனையை தீர்க்க வேண்டும் விட்டுக்கொடுத்து போகும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டிய எஸ்.ஜே.சூர்யா கல்லூரி வாழ்க்கையின் காதலை அருமையாக காட்டிய படம்.

kathal

காதல்

வேறு ஜாதியிலோ, வேறு மாதத்திலோ காதல் செய்தால் பெற்றோர்கள் பெரும்பாலும் பிரித்து விடுவார்கள் என்பதை பல படங்களில் இதற்கு முன் பார்த்திருந்தாலும், அவர்கள் எப்படி பிரிக்கிறார்கள், அப்படி பிரிக்கும்போது அந்த காதல் ஜோடிக்கு ஏற்படும் பாதிப்பின் ஆழத்தை மிக அழுத்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் சொன்ன படம். ஜாதி வெறியின் முகத்தை மேக்-அப் இல்லாமல் காட்டிய படம்.

unn

உன்னாலே உன்னாலே

காதலிக்கும் பையனோடும் சரி, பெண்ணோடும் சரி சேர்வது மட்டுமே காதல் இல்லை. சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக பிரிய நேர்ந்தாலும் அதுவும் காதலே என்ற புதிய தத்துவத்தை முதன்முதலாக சொன்ன படம். இருமனம் ஒத்துப்போய் பிரிவதிலும் சந்தோசம் உண்டு என்று பிரிவதைகூட பாசிட்டிவாக காட்டியிருப்பார் இயக்குனர் ஜீவா.

vinn

விண்ணைத்தாண்டி வருவாயா

வயதில் மூத்த பெண்கள் மீது வரும் காதலும் உண்மை என்பதை அழகாகச் சொன்ன படம். சமூகத்தில் மூத்த பெண்களை காதல் செய்து பிரிந்தாலும் அதன் வலியும் மகிழ்வும் தொடரும் என்பதை கவித்துவமாக காட்டியிருக்கும் படம்.

ok

ஓ காதல் கண்மணி

தற்போதுள்ள சூழலில் கல்யாணமும் வேண்டாம், காதலும் வேண்டாம், லிவிங் டு கெதர் வாழ்க்கை போதும் என்ற மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் பெருகி வருவதும் அப்படி வாழும் வாழ்க்கை வெற்றிகரமாக முடிக்காமல் பிரிந்துவிடுவதும் வாடிக்கையாகி போன இக்காலகட்டத்தை எப்படி கல்யாணத்தில் கொண்டு போய் முடிக்க வேண்டும். கணவன் மனைவியின் உறவு எந்தளவு மகத்தானது என்ற உண்மையை தற்போதுள்ள காதலின் மூலம் மிக இளமையாக காட்டிய படம். இளைஞர்களின் வழியிலேயே போய் அதில் இருக்கும் நன்மை தீமையை அழகாக காட்சி படுத்தியிருப்பார் மணிரத்னம்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe