
கேரள மாநில அரசு வருடந்தோறும் திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 52வது திரைப்பட விருது வழங்கும் விழா, வருகின்ற 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நேஹா “அந்தரம்” எனும் திரைப்படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கை நேஹாவிற்கு தனது வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “தமிழ்நாட்டைச் சேர்ந்த நேஹா, ‘அந்தரம்’ என்ற திரைப்படத்தில், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக, திருநங்கையருக்கான சிறப்புப் பிரிவில், விருதுக்குத் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அரசியல், கலை ஆகிய துறைகளில் திருநங்கையர் தங்களுக்குரிய இடத்தைப் பெறவேண்டும் என்று கருதுபவன் என்ற வகையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் நேஹாவின் இந்த வெற்றி எனக்குப் பெருமையளிக்கிறது.
குடும்பத்தின் புறக்கணிப்பால் இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, தனது கடும் உழைப்பினாலும் தேடலினாலும் சாதித்துள்ள நேஹா மேலும் பலருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊக்கமாகவும் திகழ வாழ்த்துகிறேன். திரைப்படங்களில் திருநங்கையரும் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்து, அத்துறையிலும் சமூகநீதி நிலைநிறுத்தப்பட விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.