கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் திரையுலகில் பல படங்களுக்கு விநியோகஸ்தகராகவும் செயல்பட்டுள்ளார், அமீரின் இயக்கத்தில் உருவான 'ஆதிபகவன்' படத்தைத் தயரித்தும் உள்ளார்.
இந்நிலையில், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி. ராஜேந்தர், மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜெ.அன்பழகன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.