
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கள் திறக்க அனுமதி வழங்காமல் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து எப்போது திறப்பது என்பது குறித்த முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதில், ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த யாருக்கும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து டி.ஆர் வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பாக மீண்டும் திரையரங்குகள் திறப்பது குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தை வரும் 8 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக திரைப்பட உரிமையாளர்கள், திரைப்பட அதிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவைக் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா என ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அழைப்பில்லை. ஆனால், குறைவான திரைப்படங்களை வெளியிடக்கூடிய குஜராத்தில் இரண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதைப் பற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது. எங்கள் ஆதங்கத்தை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் இதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.