இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என இன்னும் பல முகங்களை கொண்ட டி.ராஜேந்திர், தற்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியுள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கவண் படம் வெளியான அதே ஆண்டு வெளியான ‘விழித்திரு’ படத்தில் சிறப்பு தோற்றமாக ஒரு பாடலில் தோன்றிருந்தார். இதையடுத்து ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ‘சிக்குடு வைப்’ பாடலில் சில வரிகள் பாடியிருந்தார். இப்பாடலின் மியூசிக் வீடியோவில் தோன்றி நடனமாடியிருந்தார்.
இந்த நிலையில் அவரது படங்களை மறு வெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்காக டி.ஆர். டாக்கீஸ் என்ற புது நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “டி.ஆர். டாக்கீஸ் நிறுவனம் மூலம் என்னுடைய பல படங்களை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு பிள்ளையார் சுலி போட்டதை போல, முதல் படமாக ‘உயிருள்ள வரை உஷா’ படத்தை ரீ ரிலீஸ் செய்கிறேன். செப்டம்பரில் ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. செப்டம்பர் மாதம் தான், என் மனைவி உஷாவை கரம் பிடித்தேன். அதற்கு பிறகுத்தான் இந்த படத்தை தயாரித்தேன்.
புது பட ரிலீஸுக்கு மத்தியில் ரீ ரிலீஸ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். உதாரணத்துக்கு விஜய் நடித்த கில்லி படம், புது சாதனையை படைத்தது. அதே போல சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்கள் புது சரித்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். அதனால் உயிருள்ள வரை உஷா படத்தை இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே தரத்துடன் டால்பி சவுண்டில் மெருகேற்றி வைத்திருக்கிறேன். இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய சொன்னது சிம்பு தான். இந்த படம் எடுத்த பிறகு தான் சிம்பு பிறந்தார். நான் முதலில் ஒரு தலை ராகம் படத்தை தான் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய சிம்பு தான் ஐடியா கொடுத்தார். அவருக்கு படத்தில் வரும் ‘கட்டடிப்போம்’ பாடல் ரொம்ப பிடிக்கும்” என்றார்.