96 பட இயக்குநர் பிரேம் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி இருவருக்கும் இடையிலான அன்பை நகைச்சுவை கலந்து எமோஷ்னலாக இப்படத்தை உருவாக்கியிருப்பது போல் தெரிந்தது. இப்படம் யூ சென்சார் சான்றிதழ் பெற்று நாளை(27.09.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படக்குழுவிற்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், சூர்யா மற்றும் கார்த்தியை சந்தித்து ‘மெய்யழகன்’ படத்திற்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொவினோ தாமஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நான் நடிகராக வேண்டும் என நினைத்த காலத்தில் இருந்தே இவர்களை பார்த்துதான் ஊக்கம் பெற்றேன். இப்போது இவர்களுக்கு நடுவில் நிற்கிறேன். எனது திரைப் பயணத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது. மெய்யழகன் படத்திற்கு வாழ்த்துகள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். முன்னதாக இப்படத்தின் ட்ரைலரை வெளியான போது டொவினோ தாமஸ் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.