
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான படம் '2018'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிட்டிருந்தது. கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சர்வதேச திரைப்பட விருது நிகழ்ச்சியான செப்டிமியஸ் விருதுக்கு டோவினோ தாமஸ் பரிந்துரைக்கப்பட்டார். ஆண்டுதோறும் நெதர்லாந்தில் நடைபெறும் இந்த விருது, இந்தாண்டும் கடந்த 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் சிறந்த ஆசிய நடிகருக்கான பிரிவில் டோவினோ தாமஸுக்கு செப்டிமியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டோவினோ தாமஸ். இப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.