உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேன்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிடா வில்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “ஹெலோ ஃபோல்க்ஸ், நானும் ரிடாவும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். எங்களுக்கு உடல் சோர்வு, சளி மற்றும் உடல்வலி இருந்தது. ரிடாவுக்கு அவ்வப்போது காய்ச்சல் வந்து வந்து போனது. மருத்துவர் பரிசோதனைக்கு பிறகு டெஸ்ட் செய்யப்பட்டது. அந்த் டெஸ்டின் முடிவில் எங்கள் இருவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மக்கள் மற்றும் எங்களின் நலனை கருத்தில்கொண்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம், உலகிற்கு எங்களுடைய உடல்நலன் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.