
ஸ்பேஸில் நடப்பது போன்ற கதையை யோசித்து அதை கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கி படம் எடுப்பது என்பது தற்போதையை கணினி உலகில் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் பலவிதமான ஸ்பேஸ் கதைகளைப் பார்த்து வருகின்றனர். ஆனால், நேரடியாக ஸ்பேஸில் இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை.
அந்த யுக்தியைக் கையாண்டு படமெடுக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸும், தொழிலாதிபர் எலன் மஸ்க்கும், நாசாவும் திட்டம் தீட்டியுள்ளது. ரிட்டர்ன் ஃப்ரம் ஆர்பிட் என்ற ரஷ்ய படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் விண்வெளியில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு யாரும் விண்வெளியில் முழு நீளப்படத்தை எடுக்கவில்லை.
தற்போது வெளியான ஒரு தகவலில், நடிகர் டாம் க்ரூஸை வைத்து விண்வெளிக்குச் சென்று முழு நீல ஆக்ஷன் படத்தை உருவாக்க நாசாவும், நடிகர் டாம் க்ரூஸும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியால் விண்வெளிக்கு படக்குழுவுடன் பயணம் மேற்கொண்டு படமெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் டாம் க்ரூஸ் இதுவரை தான் நடித்த படங்களில் எந்த எல்லைக்கும் சென்று ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் துனிச்சல்மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே, அதனால் இந்தப் பேச்சுவார்த்தை வெறும் பேச்சாக இல்லாமல் செயலாகவும் மாறும் என்று பலரும் எதிர்பார்ப்பதாகச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.