பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸூம் கியூபா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஆனா டி ஆர்மஸும் சமீபகாலமாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த ஜூலையில் இருவரும் கைகோர்த்து சாலையில் நடந்து போகும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இதனால் இருவரும் காதலித்து வருவது உறுதி என ரசிகர்கள் கருதினர்.
டாம் க்ரூஸ்(63) இதுவரை மூன்று பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். முதலில் ஹாலிவுட் நடிகை மிமி ரோஜர்ஸ் என்பவரை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து 1990ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்பு நிக்கோல் கிட்மேன் எனும் நடிகையை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அடுத்து நடிகை கேட்டி ஹோம்ஸ் என்பவரை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனா டி ஆர்மஸை(37) பொறுத்தவரை ஒரு திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நடிகர் மார்க் க்ளோடெட் என்பவரை திருமணம் செய்து 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் டாம் க்ரூஸூம் ஆனா டி ஆர்மஸும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை சாதாரணமாக அல்லாமல் எதாவது வித்தியாசமாக நடத்த இருவரும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாமா இல்லையென்றால் ஸ்கைடைவிங் சாகசம் மூலம் திருமணம் செய்து கொள்ளலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஸ்டண்ட் காட்சிகளில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டாம் க்ரூஸ் வியப்பூட்டும் பல ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருபவர் என்பது நினைவுகூரத்தக்கது.