கடந்த 1986 ஆம் ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட படம் ‘டாப் கன்’.இந்தப்படத்தின் சீக்வல் டாப் கன் : மாவரிக் படத்திற்காக முப்பது வருடங்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து, ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.முதலில் இந்த வருட ஜூலை மாதம் என்று ரிலீஸ் தேதி அறிவித்தது.ஆனால், பட வேலை அதிகம் இருந்ததால் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதனால் ஏற்படும் பாதிப்பும் இழப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது.கோடை விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலிஸுக்கு காத்திருந்த பெரிய பட்ஜெட் படங்களெல்லாம் தற்போது தள்ளிப்போகிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 34 வருடங்கள் கழித்து ரிலீஸாகுவதாக இருந்த இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாம் க்ரூஸ் தனது ட்விட்டர்பக்கத்தில், “எனக்கு தெரியும் பலபேர் இதற்காக 34 வருடங்கள் காத்திருக்கின்றனர். எதிர்பாராதவிதமாக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியுள்ளது.டாப் கன் : மாவரிக் டிசம்பர் மாதம் பறக்கிறது.அனைவரும் பத்திரமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.