Skip to main content

"என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய ஒளிப்பதிவாளர்" - ஹீரோ பகிர்ந்த ஷாக் நினைவு  

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்' திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின்  விமர்சனக் கூட்டம் 'கூகை' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'டுலெட்' நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தான் செழியனிடம் உதவியாளராக சேர்ந்த கதையை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். சந்தோஷ். அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஆவார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தின் இயக்குனர் செழியன், 'கல்லூரி', 'பரதேசி' உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் சந்தோஷ். அவர் பேசியது...

 

tolet santhosh sriram



"நான் ஆரம்பத்தில் சிலரிடம் பணியாற்றினேன். ஆனால், எதுவும் சரியாக அமையலை. தமிழ் சினிமாவில் பொதுவாகவே பெரும்பாலானோர் தங்கள் உதவியாளராக புதிதாக சேர்பவர்களுக்கு எதுவும் கத்துக்கொடுக்க மாட்டாங்க. எல்லா விஷயங்களையும் கொஞ்சம் அடைச்சே வைப்பாங்க. ஒரு சீனை எப்படி எடுக்கணும் என்பதையோ, என்ன மாதிரி புக்ஸ் படிக்கணும் என்பதையோ கூட சொல்ல மாட்டாங்க. அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் வேல பாத்தேன். கூடுதலா அவர் என்னை பயங்கர டார்ச்சர் பண்ணார். சரியென்று அவர்கிட்ட இருந்து விலகி செழியன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினப்போ, செழியன் சார். 'நீதான் இப்போ அங்க வேலை பாக்குறியே, ஏன் விலகுற?'னு கேட்டார். நான் சொன்னேன், 'அவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறார் சார்'னு. "அப்படி என்ன டார்ச்சர் பண்ணுறார்?" என்று கேட்டார். "என்னை கெட்ட வார்த்தையில் திட்டுறார் சார்"னு சொன்னேன். உடனே அண்ணன் சொன்னார், "அப்போ நீ முதல்ல அந்த ஆளை அடிச்சிட்டு வா, நான் உன்ன சேத்துக்குறேன்" என்று. "என்னது அடிக்கிறதா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்"னு சொன்னேன். "அப்படின்னா அட்லீஸ்ட் போன் பண்ணி அவரை திட்டிட்டு வா. நீ ஒரு மனிதன், ஒரு சக மனிதன் உன்னை எப்படி கெட்ட வார்த்தையில் திட்டலாம்?"னு சொல்லி சுயமரியாதை கற்றுக்கொடுத்து, பின்னர் என்னை வேலைக்கு சேர்த்து அங்கீகாரமும் கொடுத்தார். பாத்துக்கங்க, செழியன் சார் கேட்ட குவாலிஃபிகேஷனை. ஆனா, நான் அந்த ஒளிப்பதிவாளர அடிக்கலை. சார் போன் பண்ணப்ப எடுக்கவேயில்லை".

 

director chezhian



இவ்வாறு தன் அனுபவத்தை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ், தான் ஒவ்வொரு முறை வேலையில்லாமல் இருந்த போதும் செழியன் திடீரென அழைத்து ஒரு வேலை கொடுத்ததாகவும், அப்படித்தான் 'பரதேசி' படத்தின் மேக்கிங் வீடியோ, பின்னர் இந்த டுலெட் நடிப்பு வாய்ப்பு ஆகியவை கிடைத்ததாகவும் தெரிவித்தார். "சினிமாவில் பொதுவாக, மாலை ஆறு மணி ஆனால் வேறு மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், எங்க சார் 'கல்லூரி' ஷூட்டிங் தினமும் ஏழு மணிக்கு முடிஞ்சபின்னாடி லேப்டாப் எடுத்து வச்சு எங்களுக்கு ஒளிப்பதிவு குறித்து கற்றுக்கொடுப்பார்" என்று கூறி நெகிழ்ந்தார்.                                       

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த ஹீரோவுக்கு இத்தனை முகங்களா?

Published on 28/04/2020 | Edited on 28/04/2020


 

vattara valaku



தமிழில் ஒரு உலக சினிமாவான 'டுலெட்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பே உலகின் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்று தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்தது. 'டுலெட்' படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'டுலெட்' படத்தின் கதைநாயகனாக நடித்தவர் சந்தோஷ் நம்பிராஜன்.


செழியனை போலவே சந்தோஷ் நம்பிராஜனும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். 'பரதேசி' படத்தில் செழியனின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தில் இவர் நடித்ததற்கு செழியன்தான் காரணமென்றாலும் அதன் பிறகு தன் ஆர்வத்தை நடிப்பின் பக்கம் வளர்த்துக்கொண்ட சந்தோஷ், அடுத்ததாக 'வட்டார வழக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மதுரை வட்டாரத்தில் மண்ணின் வேர்களோடு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

  agandan



ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதை தாண்டி இன்னும் சில முகங்களும் இவருக்கு இருக்கிறது. யூ-ட்யூபில், 'சந்தோஷ் நம்பிராஜன்' என்ற தனது சேனலில், நடிப்புப் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா தொடர்பான பிற அறிவுரைகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து சினிமா முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறார். இது மட்டுமல்லாமல் 'நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சிங்கப்பூர் தீபாவளி', 'சிங்கப்பூர் பொங்கல்' ஆகிய தனியிசை பாடல்களை தயாரித்து வெளியிட்டார். அந்தப் பாடல்கள் இணைய தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பகிரப்பட்டன. நம்பிராஜன் என்பது இவரது தந்தை கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர்.


தற்போது தனது அடுத்த முயற்சியாக, நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனிலேயே 'அகண்டன்’ என்ற ஒரு முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஐ-ஃபோன்-11ப்ரோவில் படமாக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கும் அவர், தனது இந்த ஐடியாவுக்கு வழி காட்டியதாக 'கான்டேஜியன்' பட புகழ் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பர்க்குக்கு நன்றி கூறுகிறார்.           

 

 

Next Story

"அவர் விமர்சிப்பவர் மட்டுமல்ல, நல்ல படத்தை எடுக்கத் தெரிந்த வித்வான்" - பாலாஜி சக்திவேல் பாராட்டியது யாரை?    

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்; திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் மீதான விமர்சனக் கூட்டம் கூகை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டுலெட் படக்குழுவினரோடு திரையுலக பிரபலங்களும், பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற ‘காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ’ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'டுலெட்' திரைப்படம் பற்றிய தனதுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
 

balaji sakthivel speech



"சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் ‘செப்பரேஷன்’என்ற ஈரான் திரைப்படத்தைப் பார்த்து ரொம்ப வியந்து போனேன். இவ்வளவு இயல்பான படத்தை எப்படி எடுத்தார்கள் என எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது. இதற்கு முரணாக, 'செப்பரேஷன்' திரைப்படத்தின் இயக்குனர் ‘அஸ்கர் ஃபர்கதி’ இந்தப் படத்தைப் பார்த்து வியந்து பேசியிருக்கிறார். உலகின் சிறந்தப் படங்களை இயக்கக்கூடிய இயக்குனர் ஒரு தமிழ் திரைப்படத்தைப் பாராட்டுவது சாதாரணமாக நிகழக்கூடியது அல்ல. அதற்காகவே செழியனுக்கு மிகப் பெரிய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், மிகப் பெரிய படைப்பாளியின் பார்வையும் ஒரு சாதாரணப் பாமர மனிதனின் பார்வையும் சந்திக்கும் புள்ளியில் உருவாகியிருக்கிற படைப்புத்தான் ‘டுலெட்’திரைப்படம். இதுதான் உலக சினிமா.

நான் பளாசோ தியேட்டரில் படம் பார்த்தேன். அங்கு இதற்கு முன் ஆரவாரமான பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் டுலெட் படத்தைப் பார்க்கும்போது, செழியன் எதை நினைத்துப் படம் எடுத்தாரோ அதை எல்லோரும் அமைதியாய் உள்வாங்கினார்கள். செழியன் ஒரு ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால் படத்தின் காட்சிகளுக்குள் பார்வையாளர்களை அழைத்துச்செல்கிறார், படத்தில் வரும் குடும்பத்தோடு இணைத்துவிடுகிறார். அந்தக் குழந்தையை, கணவன் மனைவி பாசத்தை, அவர்களுக்குள்ளான பிரச்சனைகளை, ஏக்கங்களை அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்கிறார். இந்தப் படத்தைப் பார்ப்பதே ஒரு புது அனுபவம். எந்தவொரு நாடகத்தன்மையும் இல்லாமல், எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் மிகவும் இயல்பாய் நகர்கிறது இப்படம். சொல்லப்போனால் இயல்பு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை படம் முழுவதும் தெளித்திருக்கிறார் இயக்குனர் செழியன்.  அவர் என்னிடம் இதுபோன்ற படங்களை எடுக்கவேண்டும் என அடிக்கடி கூறுவார், இப்போது அவரே இதை செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

tolet movie



செழியன் இதற்குமுன் பல உலகத்திரைப்படங்களைப் பார்த்து அதை உள்வாங்கி விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். விமர்சிப்பவர்கள் எல்லாம் வித்வானாக முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் செழியன் விமர்சகர் மட்டுமல்ல சிறந்த வித்வான் என்பதையும் நிரூபித்துவிட்டார். நாங்களெல்லாம் அவரிடம்தான் உலக சினிமாக்களை அறிந்துகொண்டோம். அத்தகைய உலக சினிமாவை அவரே இயக்கி தமிழ் சினிமாவிற்கு உலகத்தை நோக்கிய மிகப் பெரியப் பாய்ச்சலை கொடுத்திருப்பதை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். தனது எண்ணங்களையும் அறிவையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு அமைதியாய் இருப்பவர் செழியன். அதுபோல் இந்தப் படமும் மிக இயல்பாய் இருந்துப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. படத்தில் இளங்கோவாக நடித்த சந்தோஷ், மிக கனமான கேரக்டரை மிக அசால்ட்டாக நடித்துள்ளார். எந்தத் தோற்ற மாற்றமும் இல்லாமல் இயல்பாக இளங்கோவை அப்படியே கண்முன் காட்டியிருக்கிறார். அதுபோல் அமுதா கேரக்டரில் நடித்திருக்கும் ஷீலாவைப் போல், ஒரு நல்ல தமிழ் முகத்தை, தமிழ் பேசக்கூடிய, மிக நுணுக்கமாக நடிக்கக்கூடிய கதாநாயகியைத் தமிழ் திரையுலகிற்குக் கொடுத்ததிற்காகப் படக்குழுவினருக்கு நன்றிச் சொல்லவேண்டும்.

பாலு மகேந்திரா இப்பொழுது இருந்திருந்தால் இப்படத்தைப் பற்றி மிக நுட்பமாகவும் பெருமையாகவும் பேசியிருப்பார். இதுபோன்ற படங்களை செழியன் தொடர்ந்து இயக்கவேண்டும். அதுமட்டும் இல்லாமல் நல்ல இசைஞானம் கொண்ட அவர் தனது அடுத்த படத்தையாவது இசையுடன் வெளியிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்".