Skip to main content

“அட இது இஸ்ரோ கூட சொல்லலையே...” - மாதவனை கலாய்த்த டி. எம் கிருஷ்ணா

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

tm krishna talk about madhavan isro speech

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மாதவன், “ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மேலும் பஞ்சாங்கத்தின் உதவியுடன் தான் இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப முடிந்தது" என்று தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடிகர் மாதவனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மாதவனை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் பிரபல பாடகர் டி.எம் கிருஷ்ணா நடிகர் மாதவனின் பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இது ஏமாற்றமளிக்கிறது. இஸ்ரோ கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படி இருக்கையில் எப்படி பஞ்சாங்கத்தையும், இஸ்ரோவையும் ஒப்பிட்டு பேச முடியும்" என்று மாதவனை சாடியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் திட்டம்; விண்வெளி வீரராகத் தமிழர் தேர்வு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
gaganyan Project Tamil chosen as an astronaut

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு இதுவரையில் மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

gaganyan Project Tamil chosen as an astronaut

இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப் படையில் பணியில் இணைந்தார். இந்திய விமானப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய விமானப் படையின் புதிய போர் விமானங்களின் டெஸ்டிங் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.