ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருந்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் எந்த புது படங்களும் மே மாதம் இறுதி வரையில் வெளியாகாது என்பது தெரிய வருகிறது. இதனால் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் நேரடி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் சங்கச் செயலாளர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர்கள் இப்படி நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஸ் பேசிய ஆடியோ வெளியாகி வைரலானது. அதில், “தயாரிப்பாளருக்கு டிஜிட்டலில் விற்க உரிமை இருக்கிறது. வியாபார சுதந்திரத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு பதிலடி தரும் வகையில் திருப்பூர் சுப்ரமணியம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், “தற்போது நடைபெறும் பிரச்சனை குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் பேசினோம். அவர்கள் அதுகுறித்து எந்தவித விஷயமும் தெரிவிக்கவில்லை என்பதால்தான் செயலாளர் நேற்று இரவு வீடியோ வெளியிட்டார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து அல்ல, ஒட்டுமொத்த சங்க நிர்வாகிகளின் கருத்துதான்.

இன்றைக்கு என்னை சில தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். எப்படி எங்கள் செலவில் எடுக்கப்பட்ட படம் ஓடிடி பிளாட்ஃபார்மில் போடக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றார். நான் சொன்னேன், அவர் எந்த இடத்திலும் ஓடிடியில் போடக்கூடாது என்று சொல்லவில்லை. உங்களுக்கு எப்படி வியாபார சுதந்திரம் இருக்கிறதோ, அதேபோலதான் முதல் போட்டு திரையரங்கை கட்டியிருக்கிறோம். எங்க திரையரங்கில் என்ன படம் போட வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால், போடு என்று உங்களால் கட்டாயப்படுத்த முடியாது. அவர் அந்த அர்த்தத்தில்தான் பேசியிருக்கிறார். கரோனா பிரச்சனை முடிவடைந்தவுடன் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து, நம்முடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றினால்தான் திரையரங்குகளை திறக்க வேண்டும்.
இன்றைக்கு காலையிலிருந்து தயாரிப்பாளர்கள் தரப்பில் ஒன்றை சொல்கிறார்கள். நீங்களெல்லாம் சின்ன படங்களை போடுவதில்லை. பாருங்கள்! அதையெல்லாம் அமேசான் வாங்க தொடங்கிவிட்டான் என்று சொல்கிறார்கள். அமேசான் அப்படி என்ன சின்னப் படத்தை வாங்கியது. ஒரு பிரபல நடிகையின் படத்தை வாங்கியுள்ளது. அவருக்கு அந்த பிரபலம் எதன் மூலமாக வந்தது திரையரங்குகள் மூலமாகதான் வந்தது. ஒவ்வொரு ஹீரோவுக்கும் பிரபலம் எப்படி கிடைத்தது என்பதை மறந்துவிட்டார்களா? அப்போதைய காலம் தொடங்கி தற்போதுவரை திரையரங்குகள் மூலமாகதான் பிரபலம் கிடைத்தது. ஏறி வந்த ஏணியை மறந்துவிட்டார்கள்.
நான் விநியோகஸ்தர் சங்கத்தில் தலைவராக இருந்தபோது, கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திற்காக ரஜினி அண்ணாமலை படத்திற்கு சம்பளமாக நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவை கேட்டார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் இது ஒரு மோசமான முன்னுதாரணம் என்று சொல்லிவிட்டு எதிர்த்தது. அப்போது நான் சொன்னேன் ஏரியாவை சம்பளமாக வாங்கினால் நல்லதுதான். படம் சரியாக ஓடவில்லை என்றால் குறைந்த சம்பளம், நன்றாக ஓடினால் நல்ல சம்பளம் என்றேன். தற்போது தர்பார் படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, ஹிந்தி மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்தையும் சேர்த்து சம்பளமாக கொடுக்கிறார்கள். இவர்கள் சொல்கிறார்கள் வியாபார தளம் விரிவடைந்துவிட்டதாக ஆனால் 35 வயது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் மட்டும் வியாபாரம் செய்தபோது தயாரிப்பாளர்கள் நன்கு சம்பாதித்துதான் வந்தார்கள். திரையரங்குகள் 4000 இருந்தன அத்தனையும் நான்றாகதான் இருந்தன. காரணம் அன்றைக்கு இருந்த நடிகர்கள் எட்டு முதல் பத்து படங்கள் வரை நடித்துக்கொண்டிருந்தனர். மக்களை திரையரங்குக்கு அழைத்து வந்தனர். தற்போது தங்களின் வியாபார தளம் உயர்ந்துவிட்டதாக பலகோடிகள் சம்பளமாக பெற்றுக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றரை வருடங்கள் நடித்து கொடுப்பதால்தான் திரையரங்குகள் மூடத் தொடங்கின. அதேபோல கார்ப்ரேட்களுக்குதான் கால்ஷீட் தருகிறார்கள். பிறகு எப்படி தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரும். இப்படிபட்ட நிலைக்கு, யார் காரணம் நாங்களா காரணம். நீங்களும் சம்பாதிக்க போவதில்லை, எங்களையும் சம்பாதிக்கவிட போவதில்லை.
இனிமேல் படம் வெளியாகி குறைந்தது நூறு நாட்கள் கழித்துதான் ஓடிடியில் படம் வெளியிடுவோம் என்று உத்தரவாதம் கொடுத்தால்தான் படத்தை எடுத்து வெளியிடுவோம். இன்னும் பல விஷயங்களை அரசாங்கத்திற்கு எடுத்து செல்லுவோம். அதன்பின் திரையரங்குகளை திறந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.