ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஆந்திர துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. என்.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், அனுபம் கெர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள படம் ஏற்கனவே பல முறை ரிலீஸுக்கு திட்டமிட்டு தள்ளிபோய் கொண்டே இருந்தது.
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் இப்படம் ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. துணை முதல்வர் ஆன பிறகு முதல் படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக பவன் கல்யாண் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல் 2023ல் வெளியான ப்ரோ படத்திற்கு பிறகு பவன் கல்யாணின் படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் 23ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி அம்மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. தெலங்கானாவில் 23ஆம் தேதி அன்று ப்ரீமியர் காட்சி டிக்கெட்டுகள் ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் ரூ.600 விலை ப்ரீமியர் காட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.