/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/30_62.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் நெருங்கிய நண்பரும் நடிகருமான தியாகு, “தயாரிப்பாளர் சங்க கடனை அடைத்ததிலிருந்து எவ்ளோ பண்ணியிருக்கார். வேட்டியை மடிச்சு கட்டினால், அப்டி இருப்பார். அவரை விட்டால் எங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது. சிவாஜியுடைய இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததற்கு விஜயகாந்த் தான் காரணம். அவர் இல்லையென்றால் சத்தியமா அது சிறப்பா நடந்திருக்காது. தீபாவளிக்கு போய் பார்த்தேன். அவருடைய கையை பிடிச்சுகிட்டே இருந்தேன். அப்போ சிரிச்சார். இப்போ ஒன்னுமே இல்லை.
அவர் அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு புளியோதரை போடுவார். நான் பல முறை ஷூட்டிங் இடைவெளியில் அங்க போய் சாப்பிட்டுவிடு வருவேன். என் ஊர் கோவிலுக்கு மணி வாங்கிக்கொடு என்றேன். அவர் வாங்கி கொடுத்தது இன்னும் அடிச்சுகிட்டு இருக்கு. அப்படி ஒரு நல்ல நண்பன். எல்லாத்துக்கும் உதவி செய்வது தான் அவரின் வேலை. நடிகர் சங்கம் வந்தால், அனைவரின் பிரச்சனையை தீர்த்து வைப்பது தான் வேலை. கலைஞருக்கு பொன்விழா எடுத்த போது, மனோரமாவை அழைத்து வர சொல்லி கலைஞர் என்னிடம் சொன்னார். அதை விஜயகாந்த்திடம் சொன்ன போது உடனே மனோரமாவை அழைக்க கிளம்பிட்டார். அவரை பார்த்துவிட்டு திரும்ப வரும்போது, ஒரு பொன்னோட செயினை ஒருத்தன் அறுத்துட்டான். அந்த திருடனை துரத்தி விஜயகாந்த் ஓடினார். செயினை வாங்கி கொடுத்துவிட்டு தான் சென்றார். இது போன்று நிறைய உதவிகளை செய்வார். அவரை போல் இனிமேல் யாரும் வர முடியாது. அவரோடு 27 படங்கள் நடித்துள்ளேன்” என கண்ணீர் மல்க பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)