
தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'துணிவு' மற்றும் 'வாரிசு' கோலாகலமாக வெளியாகி திரையரங்கில் வெற்றி நடைபோடுகிறது. இரு படங்களையும் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திருவிழா போலக் காட்சி அளிக்கிறது திரையரங்கம்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று (11.01.2023) சிறப்புக் காட்சிகளுடன் தொடங்கிய இப்படங்களுக்கு வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் மறுக்கப்பட்டது. மேலும் பால் அபிஷேகம் செய்யத் தடை விதித்தும் அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது எனவும், தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இதனிடையே திரைப்பட விநியோகஸ்தர்கள் கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தமிழக அரசு விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றுத் திரையரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, வரும் 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.