நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பின்பு சமீபத்தில் கமல் எழுத்தில் வெளியான முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி நடக்கவுள்ளது. முன்னதாக 16ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. பின்பு சோசியல் மீடியா பிரபலங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. ‘சுகர் பேபி’ என்ற பாடல் வருகின்ற 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சிவா ஆனந்த எழுதியுள்ளதாகவும் பாடல் தொடர்பாக ஒரு போஸ்டர் ஒன்றும் வெளியாகியிருந்தது. அதில் த்ரிஷா மட்டும் இடம் பெற்றிருந்தார். அதனால் அவரது கதாபாத்திரம் சம்பந்தமான பாடலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அப்பாடலின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் த்ரிஷா பாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் நாளை(21.05.2025) மாலை 5 மணிக்கு பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.