Skip to main content

‘தக் லைஃப்’ பட வழக்கு; நீதிமன்றம் உத்தரவு

Published on 10/06/2025 | Edited on 10/06/2025
thug life movie karnataka release case update

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக பட வெளியீட்டுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல் பேசியிருந்த நிலையில் அது கர்நாடகாவில் சர்ச்சையானது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின. 

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மை எரிக்கப்பட்டது.

கர்நாடக  திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க விரும்புவதாக தெரிவித்தது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் கேட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்று(10.06.2025) ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கர்நாடகாவை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் படம் வெளியானது. 

இந்த நிலையில் கமல் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்