thug life karnataka release issue case

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தி படத்திற்கு தடை விதித்தது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகபிரசன்னா, கமல் தரப்பிடம் ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுக்கிறதா? என சராமாரி கேள்விகளை எழுப்பினார். பின்பு படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க விரும்புவதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் கேட்டது. பின்பு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அதன்படி இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதுபதி, கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா? உச்ச நீதிமன்ற விசாரணை என்ன ஆனது? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசனின் வழக்கறிஞர், நடிகர் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். பின்பு வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரட்டும் என வலியுறுத்தினார்.