"பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" - ரஜினிகாந்தை சாடிய அருணா ஜெகதீசன் ஆணையம்

Thoothukudi Sterlite issue aruna jagadeesan Commission explained rajinikanth opinion

தூத்துக்குடியில்கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் விசாரணையை முடித்து 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பித்தனர். மேலும் சட்டப்பேரவையிலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல விவகாரங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசன், தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி சென்றிருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து குறித்து நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரஜினி, "ஸ்டெர்லைட் ஆலை வன்முறையை ஏவி விட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்குத்தெரியாது" என்று தெரிவித்தார். இந்த கருத்து குறித்து தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், "சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Actor Rajinikanth Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe