Advertisment

“இன்னும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தேவைப்படுகின்றன” - திருமாவளவன்

thirumavalavan speech at Nenjam Porukkuthillaiye Audio Launch

Advertisment

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் நித்யாராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே'. இவர்களோடு ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை கிறிஸ்துதாஸ் தயாரித்திருக்கிறார். மேலும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தை இருவர் என்ற புனைப் பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். எம்.எல்.சுதர்சன் பாடல்களுக்கு இசையமைத்திருக்க ஜெயக்குமார் என்பவர் பின்னணி இசையை கவனித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள நடந்தது. இதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு இசைத் தகட்டை வெளியிட்டார். அதற்கு முன்பு மேடையில் பேசிய அவர், படக்குழுவினரை வாழ்த்தி திரைத்துறை குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அவர் பேசியதாவது, “இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்ததிலிருந்தே இவர்களுக்கு சமூக பொறுபுணர்வு இருப்பது என்பது புரிகிறது. மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நிலையான மனம் நிலை இல்லாதவனை குறிக்கும் இந்த வரிகள், ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்த பாடல் மானுட உளவியலை பற்றிய முக்கியமான பாடல். மகாகவி எந்த பொருளில் ஆதங்கப்பட்டாரோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஒரு படம் எடுத்தாலும் சோஷியல் மேசேஜ் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. காதல் இயல்பான பண்பு அதை செயற்கையாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதை கலைஞர்கள் நுட்பமாக கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும்.

Advertisment

கல்யாணத்திற்கு பிறகான பிர்சசனையை ஆணவக்கொலையை மையப்படுத்தி, தங்கள் பார்வையில் படைப்பாக்கியிருக்கிறார்கள். இது கௌரவக்கொலை அல்ல, வறட்டு கௌரவக்கொலை என்று தான் நான் குறிப்பிடுவேன். தான் பெற்றெடுத்த அன்பான பிள்ளைகளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொலை தான். ஆணவக்கொலை, சிசுக்கொலை இந்தியாவில் தான் அதிகம். இந்த இரண்டையும் நாம் அழித்து ஒழிக்க வேண்டும். பாலின பாகுபாடு இல்லாமல், சம உரிமை தரும்போது தான் இந்த நிலை மாற வேண்டும். ஏற்கனவே பல படங்கள் எடுத்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கான படங்கள் தேவைப்படுகின்றன. பல கோனத்தில் இந்த கருத்துக்களை பேச வேண்டும். பெண்களை வெறும் பொருளாக மட்டும் பார்க்கக்கூடாது. அவர்களை கவர்ச்சியாக காட்டி படத்தை ஓட வைத்துவிடலாம் என தயாரிப்பாளரோ இயக்குநரோ நினைத்து விடக்கூடாது.

காதலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நம் சமூக கட்டமைப்பு தான் காரணமாக இருக்கிறது. நம் விருப்பம் இல்லாமலேயே நம் மீது சாதி சமூக முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு சமூகம் ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை தந்து விடுகிறது. காதல் அவர்களுக்கு தரும் அழுத்தம் தான் அவர்களை சாதி தாண்டிய காதலை குற்றமாக பார்க்க வைக்கிறது. இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதை சரியாக சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பை தர முடியும். உரையாடலுக்கு உற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும். இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe