Skip to main content

“நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்?” - திருமாவளவன்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
thirumavalavan speech in Karpu Bhoomi Audio Launch

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு பேசுகையில், “நேசமுரளி ஒரு முற்போக்கான இயக்குநர். சொல்லப் போனால் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞர். வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர். படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம். அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடு தான் அவரை துணிவாக இருக்கும்படி, இயங்கும்படி தூண்டிக்கொண்டும், இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 

பொள்ளாச்சியில் நடந்தது அவ்வளவு குரூரமானது. அதனைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். அதனை என்றால் அந்தப் போக்கினை அது போல் வளர்ந்து வரும் கலாச்சாரத்தினை, சமூக ஊடகம் வளர்ந்திருக்கும் இந்தக் காலச்சூழலில் இந்தப் போக்கு வளருவது எவ்வளவு ஆபத்தானது. எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. அப்படிப்பட்ட குரூரமான நிகழ்வை படைப்பாக்க வேண்டும் என்று முடிவு செய்தது துணிச்சலான முடிவு. 90களில் ஒரு கவிதை எழுதினேன். ‘எதனையும் எதிர் கொள்ள இரு விழிப்பாய்,. இமயம் போல் தடை வரினும் எகிறிப் பாய்’ என்று. எதனையும் எதிர்கொள்வோம், அந்த துணிச்சல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியார் சொல்வார், ‘நீ போராடிப் போராடி உரிமையை வென்றெடுப்பாய், பாராளுமன்றத்தில் பேசி அதற்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை இயற்றுவாய், ஆனால் நீ இயற்றும் சட்டமே செல்லாது என்று சொல்லுகிற இடத்தில் அவன் இருப்பான்’ என்று சனாதன சக்திகளை அப்போதே தோலுரித்துக் காட்டியவர்.

ஆனாலும் கூட அதை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றால் வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். எங்கு சனாதனம் இருக்கிறது என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்றும் ஏன் அந்தக் கட்சியினை வெறுக்கிறீர்கள் என்றும் கேட்கிறீர்கள். அதோடு ஆர்.எஸ்.எஸ் ஒரு இயக்கம் தானே..? அதை எதிர்த்து ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள். வரலாற்றுப் பின்னணி தெரிந்து கொண்டால் நிச்சயமாக இந்தக் கேள்விகளே எழாது. தனிப்பட்ட முறையிலே நமக்கு எந்த அரசியல் பகையுமே இல்லை. இது ஒரு கோட்பாட்டுப் பகை. கெளதம புத்தர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு யுத்தம் இது. இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 'கற்பு பூமி' என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது…? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கே உருவாகிவிடப் போகிறது. பெண்களுக்கு எதிரான குரூரம், இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்? 

ஏன் அவர்கள் அச்சப்படுகிறார்கள். நூற்றுக்கு நூறு இது கருத்தியல் சார்ந்த பகைதான். நேசமுரளி உள்வாங்கி இருக்கும் இடதுசாரி அரசியல் தான், அதாவது கம்யூனிஸ்ட் சிந்தனை அல்ல, வலதுசாரி சிந்தனைக்கு எதிரான எல்லாமே இடதுசாரி சிந்தனை தான். பழமைவாதத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பேசும் அனைத்து சிந்தனையும் இடதுசாரி சிந்தனை தான். பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான். இந்தப் படத்திற்காகவே நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதை நீங்கள் முன்னெடுத்தால் கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கெடுப்போம்” என்றார்.

சார்ந்த செய்திகள்