Advertisment

“மனித குலத்தை வழிநடத்தும் வலிமைமிக்கது காதல்” - திருமாவளவன் 

Thirumavalavan said  most powerful thing that guides mankind is love

Advertisment

8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி நடித்துள்ள படம் செம்பியன் மாதேவி’. வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல் எழுத, கே.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவுடன் இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய திருமாவளவன், “லோகபத்மநாபன் பேசும்போது 2010-ல் உதவி இயக்குநராக இந்த மேடைக்கு வந்தேன், 14 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக வந்திருக்கிறேன், என்றார். எப்படி எழுதுகிறார், இயக்குகிறார், நடிக்கிறார், இசையும் அமைக்கிறார், என்று கேள்வி எழுப்பினார்கள், அதற்கு நான் விடை சொல்கிறேன், என்று கூறி தனது போராட்ட வாழ்வை பகிர்ந்துகொண்டார். இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிடுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நான் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படத்தை முழுமையாகப் பார்த்தால் தான் கருத்துச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு முன்னால் பேசியவர்கள் படம் பற்றி கோடிட்டுப் பேசியிருக்கிறார்கள். காதலைப் பற்றியும் பேசி அரசியலில் ஆதாயம் தேட முடியும் என்பதை நாம் தமிழ்நாட்டில் தான் பார்த்திருக்கிறோம். சினிமாத்துறையில் கூட நாடகக்காதல் என்பதைப் பற்றிப் பேசி வணிகம் தேட பார்க்கிறார்கள், அவர்கள் அரசியல்வாதிகளை விடக் கெட்டிக்காரர்கள். என் பெயரைச் சொல்லியும் பிழைக்கிறார்கள், நானும் பிழைத்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன். நானும் ஒரு மூலதன பொருளாக அவர்களுக்கு இருக்கிறேன், என்று தோழர்களிடம் நான் பகிர்ந்துகொள்வதுண்டு.

காதல் என்பது காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்ற உயர்ந்த, சிறந்த சொல். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மனிதக் குலத்தை வழி நடத்தும் வலிமை மிக்கது காதல். யாரும் சொல்லி வருவதில்லை, தூண்டியும் வருவதில்லை, அது ஒரு இயல்பான உணர்வு. அதனால் தான் ஆர்.வி.உதயகுமார் காதலித்துப் பார்த்தால் தான் காதலை புரிந்துக்கொள்ள முடியும் என்று சொன்னார். பாடம் எடுத்துப் புரிய வைக்க முடியாது. காதலுக்கு ஆசிரியர்கள் கிடையாது, அது இயல்பான உணர்வு. எல்லாம் உயிரிடத்திலும் இருக்கிறது, மனிதக் குலத்தில் மட்டும் அல்ல, உயிரினங்களுக்கு இருக்கும் பொதுவான உணர்வு காதல். ஆனால், நூறு விழுக்காடு அனைவரும் காதலித்து தான் திருமணம் செய்கிறார்கள், என்றால் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் நடக்கிறது, அதற்கான வாய்ப்பு உருவாகிறது. உணர்வு இருக்கும் அது கனியாது, மலராது, அந்த சூழல் உருவாகாது. அதனை ஏதோ திட்டமிட்டு, யாரோ சொல்லி, டீ சர்ட் போட்டால், ஜீன்ஸ் போட்டால், கூலிங்கிளாஸ் போட்டால், பெண்கள் மயங்கி விடுவார்கள், அவன் பின்னாள் போய்விடுவார்கள், என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு, அதற்கு நாடகக்காதல் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அப்படி எல்லாம் இருக்க முடியாது. காதல் காதல்தான். நாடகம் செய்து எல்லாம் யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. நாம் பெற்ற பிள்ளைகளை நாம் அவமதிப்பதாக, இழிவு செய்வதாக ஆகிவிடும். யாரையோ பழிப்பதற்காக, இழிவுபடுத்துவதற்காக நாம் பெற்ற பிள்ளைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. நம் வீட்டுப் பெண் பிள்ளைகளைக் கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் நியாயப்படுத்தக் கூடாது.

Advertisment

காதல் என்பது இயல்பானது என்றால் இயற்கை என்று பொருள், இயற்கையான உணர்வு, வலிந்து உருவாக்க முடியாது. ஒருவர் சொல்லி ஒருவர் செய்யவும் முடியாது. திரைப்படங்களாக இருந்தாலும் சரி, நாவல் எழுதுவதாக இருந்தாலும் சரி, எந்த படைப்பாக இருந்தாலும் சரி, தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடாது, இது தான் என் கருத்து, வேண்டுகோள். காதலுக்கு ஏன் எதிர்ப்புகள் வருகிறது?, எல்லாம் நாடுகளிலும் காதலுக்கு எதிர்ப்பு உண்டா என்றால் உண்டு. அதன் பரிமாணங்கள் நாடுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை இங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு கருத்தியல், காதலை மறுக்கிறது. இனக்கலரவம், சாதி பிரச்சனை வரக்கூடும் என்பது தான் அந்த கருத்தியல்.

சாதி விட்டுச் சாதி திருமணம் செய்தால், ஒரு சாதியின் தூய்மை களங்கம் ஏற்பட்டு விடும், எனவே திருமணத்தை ஒரு சாதிக்குள்ளே செய்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு சாதிக்கும் இடையிலான பிரச்சனை. சாதியிலே உயர்ந்த சாதி என்று கருதப்படுகின்ற பிரமாணர்கள் தனித் தனி சாதியினராகத் தான் இருக்கிறார்கள். அங்கேயே சாதிக் கலப்பு ஏற்படக்கூடாது என்பது இருக்கிறது. ஆகவே காதல், ஆர்.வி.உதயகுமார் சொல்வது போல், சாதி, இனம் தாண்டியது என்பது கருத்தியல். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்தால், வெட்டுவேன் என்று சொல்கிறார்கள். அதற்காக அமைத்த சட்டம் தான் மனுஸ்மிருதி, அதன் கருத்து தான் காதலுக்கு எதிர்ப்பாக நிற்கிறது. நாடகக்காதல் என்ற புதிய சொல்லைக் கொண்டு வந்து நிற்கிறது. படைப்பாளர்கள் அதைத் தாண்டி சிந்திக்க வேண்டும். பிற்போக்கான கருத்தியலில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அப்படிப்பட்ட ஆளுமை உள்ளவர்களால் தான் சிறப்பான படைப்பைக் கொடுக்க முடியும். ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. என்றோ ஒருவன் ஆண்டிருக்கிறான், ஆனால் நீ இன்று பிச்சை தான் எடுத்துக் கொண்டிருக்கிறாய், பிறகு என்ன ஆண்ட பரம்பரை. அதனால், உன் பிள்ளைகளுக்கு ஆண்ட பரம்பரை, என்று சொல்லிக்கொடுக்காமல் அறிவியலைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதைத் தான் செம்பியன் மாதேவி படமும் சொல்கிறது.

ஆணவக்கொலை என்பது போலியான கெளரவம். தன்மானம் தான் உண்மையான கெளரவம். அதை எப்போது பெற முடியும் என்றால் வாழ்க்கை பற்றிய, மனிதக் குலத்தைப் பற்றிய, அறிவியல் பற்றிய தெளிவு வரும் போது தான் அது நமக்குப் புலப்படும். செம்பியன் மாதேவி டிரைலர் தான் பார்த்திருக்கிறோம். அதில் வரக்கூடிய காட்சிகள் காதலுக்கு எதிர்ப்பு சாதியைச் சுற்றி இருக்கிறது என்பது தெரிகிறது. இதை ஏன் நாம் திரும்பப் திரும்ப பேச வேண்டும், திரும்பத் திரும்ப படமாக எடுக்க வேண்டும், திரும்பப் திரும்ப பேசுவதால் தான் பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படும். சாதி பிரச்சனை பற்றி இங்குப் பேசக்கூடாது, ஆனால் சாதி பிரச்சினை இங்கு இருக்கிறது. இந்திய மண்ணை பொருத்தவரை ஒரு மனிதனைச் சாதி உளவியல் அவனை அறியாமல் வழி நடத்துகிறது. ஆகவே, செம்பியன் மாதேவி போன்ற படங்கள் இங்கு திரும்பத் திரும்ப எடுக்கப்பட வேண்டும், இதைப்பற்றி நாம் திரும்பப் திரும்ப பேச வேண்டும். இது வன்முறைக்கான தல்ல, பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கானது. ஒரு பிரச்சனையைப் பற்றிப் பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். ஆக, இந்த பிரச்சனைகள் பற்றி பேசுவதை தொடர்ந்துக்கொன்ண்டு தான் இருப்போம், இப்படிப்பட்ட படங்களைத் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூறி, இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக் கூறி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

tamil cinema Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe