விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ப்ரீடம்’. 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் நாளை(10.07.2025) வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பு காட்சியில் படத்தை பார்த்த அவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து 43 ஈழத் தமிழர்கள் தப்பிய உண்மை சம்பவத்தை கருப்பொருளாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்து கடைசி வரை இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. 1990 முதல் 1995 வரை விசாரணைக் கைதிகளாக இருந்த ஈழத் தமிழர்கள் அங்கிருந்து எப்படி தப்பித்து போகிறார்கள் என்பதை விவரிக்கிற படம். ஈழத் தமிழர்கள் அரச பயங்கரவாதத்தால் சொந்த மண்ணிலும் அடைக்கலம் தேடி வந்த இந்திய மண்ணிலும் கொடும் துயரங்களை சந்தித்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வசனங்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது. குறிப்பாக நாயகன் சசிகுமார், நாயகி லிஜோ மோல் மற்றும் அவர்களுடன் வரும் நடிகர்கள் ஈழத் தமிழை மிக அழகாக உச்சரிக்கிறார்கள்.
வேலூர் கோட்டையில் இருந்து தப்பிக்க நினைப்பது கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல். அவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகள் கொடூரமாக இருக்கும் போது, அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது இந்த அபாரமான சாதனைகளை செய்ய முடியும் என்பதை ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு களத்திலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். தப்பித்த பிறகு சொந்த பந்தங்களை அவர்கள் பார்க்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது. ஒடுக்குமுறைகள் எந்தளவிற்கு சாதிக்க தூண்டுகிறது என்பதற்கு இந்தப் படம் சாட்சியமாக விளங்குகிறது. ஒவ்வொரு தமிழனையும் இது உலுக்கும். படத்தில் ஆரம்பத்தில் வரும் வசனம், ‘எதோ ஒரு நாட்டில் வாழ்வது சுதந்திரம் அல்ல. எங்கள் நாட்டில் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும். அதுதான் உண்மையான சுதந்திரம். அது ஒரு நாள் நடக்கும்’ என்று வரும் வசனம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.