/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/493_13.jpg)
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தனக்கென ஒரு பெயரை பெற்றவர் இயக்குநர் ராம். இதில் தங்க மீன்கள் படம் அந்தாண்டிற்கான சிறந்த தமிழ் படம் பிரிவில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராம் நடித்திருந்தார். இதை தவிர்த்து சவரக்கத்தி, சைக்கோ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்ட பலரை வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்துள்ளார். இப்படம் 53வது ரோட்டர்டாம் திரைபப்ட விழாவில் திரையிடப்பட்டது. இன்னும் திரையங்குகளில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் ராம் தனது 50வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ராமின் உதவி இயக்குநராக பணிபுரிந்து தற்போது முன்னணி இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜ் மற்றும் மற்றொரு முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித், சிம்பு, சூரி உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கோண்டு ராமை வாழ்த்தினார். அப்போது மேடையில் திருமாவளவன், ராம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்பு பேசிய திருமாவளவன், “மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் வளர்ச்சிக்கு பா.ரஞ்சித் எப்படி அக்கறையோடு இருக்கிறாரோ, அதை விட பல மடங்கு கூடுதலாக அவரை உருவாக்கியவர் இயக்குநர் ராம் என்பதை அறிந்தேன். ராம் ஒரு இடது சாரி சிந்தனையாளர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை உன்னிப்பாக கவனித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். விளிம்பு நிலை சமூகத்தை சார்ந்தவர்கள் இந்தத் துறையில் ஆளாக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு தொலை நோக்கு பார்வையோடு மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார். விழும்பி நிலை மக்களின் குரலை பிரதிபலிக்கிறேன் என்ற அடிப்படையில் நான் அவரை போற்றுகிறேன். அவரின் குடும்பம் என்ற வகையிலே கலைத்துறையில் இன்னும் ஏராளமான படைப்பாளர்கள் உருவாக வேண்டும். இலக்கிய உலகில் பாரதிதாசன் பரம்பரை என உருவானது போல அறிவுமணி பரம்பரை என கலை உலகில் உருவானது போல இயக்குநர் ராம் பரம்பரை என்று இந்த திரையுலகில் உருவாகிக் கொண்டிருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்” என்றார். பின்பு மேடையில் இருந்து அவர் இறங்கிய நிலையில் அவரை பா.ரஞ்சித், அழைத்து “சாப்ட்டியா-ணா” என அக்கறையுடன் விசாரித்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நீதி வேண்டி நினைவேந்தல் பேரணியை நடத்தினார் பா.ரஞ்சித். அந்த சமயத்தில் திருமாவளவன், “வி.சி.க.வுக்கு எதிராக அவதூறு பரப்பும் சக்திகள் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதில் வி.சி.க. தோழர்கள் பங்கேற்கக்கூடாது” என பேசி வீடியோ வெளியிட்டார். இதனால் பா.ரஞ்சித்தைத் தான் திருமாவளவன் சொன்னதாக பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பா.ரஞ்சித்தை சொல்லவில்லை என திருமாவளவன் தெளிவுபடுத்தியிருந்தார். பா.ரஞ்சித்தும் திருமாவளவனுக்கு எதிராக நாங்கள் ஒரு போதும் நிற்கமாட்டோம் என பேசினார்.
அதே சமயம் மாரி செல்வராஜின் வாழை படத்தை திருமாவளவன் பாராட்டிய நிலையில், அவரிடம் செய்தியாளர்கள், வாழை படத்தை பாராட்டிய நீங்கள் ஏன், ரஞ்சித்தின் தங்கலான் படத்தை பாராட்டவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு படத்தை பார்த்து விட்டு பாராட்டுவதா பதிலளித்த அவர், பின்பு படத்தை பார்த்து ரஞ்சித்தை பாராட்டியிருந்தார். இருப்பினும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டது சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)