thirumavalavan about vetrimaaran viduthalai movie

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் இன்று (31.03.2023) வெளியாகியுள்ளது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே வழங்கி வருகிறார்கள். மேலும் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, விடுதலை படம் பார்த்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அரசு - அதிகாரம் - ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment