சென்னையில் தங்கமணி இயக்கத்தில் மூத்த நடிகை லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பேராண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். பின்பு மேடையில் பேசிய அவர், தமிழக அரசியில் திரைத்துறையின் தாக்கம் குறித்து பேசினார்.
திருமாவளவன் பேசுகையில், “தமிழ்நாட்டு அரசியல் தொடர்ந்து திரை கவர்ச்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி கணேசன், பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர் என பலபேர் திரைத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள் கட்சி தொடங்கினார்கள். கலைஞரும், ஜெயலலிதாவும் திரைத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள்தான். இன்றைய முதல்வரும் ஓரிரு திரைப்படங்களில் நடித்தவர் தான். இப்போது வந்திருக்கும் விஜய்யும் அப்படித்தான். இது தமிழக அரசியலில் திரையுலகம் எந்தளவு ஈடுபாடு கொண்டிருக்கிறது அல்லது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது அல்லது திரை கவர்ச்சி இன்னும் குறைந்தபாடில்லை என்பதை நாம் பார்க்கிறோம்.
இந்தியா முழுவதும் பல திரை நாயகர்கள் புகழ்பெற்று விளங்குகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் திரைத்துறை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், போன்றவர்கள் தான் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். ஏதோ ஒரு வகையில் தமிழர்களை திரைத்துறை ஆளுமை செய்கிறது. ஓரிரு திரைப்படங்கள் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டால் அடுத்து அரசியலுக்கு போய்விடலாம் என்ற உளவியல் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
தேசத்தில் முதல்வர் பதவியையும் பிரதமர் பதவியையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. கொள்கை ரீதியாக முன்னெடுப்பு செய்தாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பிரதமர் பதவியில் தான் இருக்கிறது. ஆனால் அதற்கு பெரிதாக யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு தெரிந்து முதல்வர் தான் அதிகாரமிக்க பதவி என நினைக்கிறோம். ஆனால் உண்மை அப்படி இல்லை. முதல்வராக இருந்து கொண்டு பெரியளவில் கொள்கை முடிவு எடுக்க முடியாது. சமூக மாற்றங்களை பெரிதாக செய்ய முடியாது. ஊழல் இல்லாத, மாநில உரிமைகளை பாதுகாக்கலாம். உண்மையான ஆட்சி அதிகாரம், அரசியலமைப்பு சட்டத்தின் படி டெல்லியில் தான் இருக்கிறது. தமிழக மக்கள் யாருக்கும் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே வரமாட்டேங்கிறது. அப்படி தமிழர் ஒருவர் பிரதமராக ஆகிவிட்டால் ஈழத்தமிழ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்” என்றார்.