/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/390_16.jpg)
கேரளாவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் ஹிரன்தாஸ் முரளி என்கிற வேடன். இளம் பாடகரான இவர் வேடன் என்கிற பெயரிலே தொடர்ந்து இயங்கி வருகிறார். முதலில் சுயாதீன ராப் பாடகராக தனது கரியரை தொடங்கிய இவர் 2020ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதை இவரே எழுதி பாடியிருக்கையில், தான் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். இதை தவிர்த்து உலக அரசியல் முதல் பல்வேறு ஒடுக்குறைகள் பற்றி தனது பாடல்களில் பேசி வருகிறார். இவரது தந்தை கேரளத்தை சேர்தவர், தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தாய் இறந்துவிட்டார். தந்தை தற்போது கூலி வேலைக்கு செல்கிறார்.
வேடன் மீது சமீபகாலமக வலது சாரி ஆதரவாளர்கள் தொடர் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான கேசரியின் ஆசிரியர் மது என்பவர், வேடன் பாடும் ராப் இசையை குறிக்கும் வகையில், இது வளரும் தலைமுறையை விஷமாக்கும் ஒரு கலை வடிவம் என பேசியிருந்தார். இந்து ஐக்கிய வேதத் தலைவர் சசிகலா, வேடன் போன்ற ராப் பாடகர்களின் நிர்வாண நடனங்களால் இந்த சமூகம் அவமானப்படுத்தப்படுகிறது என்று கூறியிருந்தார். பா.ஜ.க. தரப்பில் பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் வி.எஸ். மினிமோல் என்பவர், பிரதமர் மோடியைப் பற்றி அவதூறு கருத்துகளை சொல்லியுள்ளதாக வேடன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.
இப்படி தொடர்ந்து வேடன் மீது புகார்கள் குவிய அவருக்கு ஆதரவாக மார்க்ஸிஸ்ட் கட்சியும் இடது சாரி ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். வலது சாரிகளின் இந்த புகார்களுக்கு முன்னதாக மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கட்சியின் நான்காவது ஆண்டின் கொண்டாட்ட விழாவில் வேடன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வேடனின் பாடல்கள் மற்றும் அவர் நேரடி கச்சேரிகளில் பாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இவருக்கு இளைஞர் பட்டாளம் ஏராளமானோர் ரசிகர்களாக இருந்து அந்த வீடியோக்களை பரப்பி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/392_20.jpg)
இந்த நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. வேடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வீடியோ கால் மூலம் வேடனிடம் பேசிய திருமாவளவன், “உங்க பாடல்களை கேட்டேன். ரொம்ப புரட்சிகரமா இருக்கு. நாங்க 35 வருஷமா பேசுற அரசியலை ரெண்டு நிமிஷ பாட்டுல சொல்லிடுறீங்க” என்றார். உடனே வேடன், “நீங்க பேசுறதுனாலத்தான் எங்களுக்கு அப்படி பாட தைரியம் கிடைக்குது” என்றார். தொடர்ந்து திருமாவளவன், “உலகளாவிய பிரச்சனை பற்றி நீங்க ஒரு பாடல் பாடினீங்கல்ல... அது ரொம்ப அருமையா இருந்துச்சு. அதை பல முறை கேட்டேன். உங்க ஸ்டைலும் நல்லாருக்கு. தைரியமா இருங்க. நாங்கெல்லாம் இருக்கோம்” என்றார். மேலும் ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் வி.சி.க. சார்பில் நடக்கும் பேரணிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு வேடன், ஒரு படம் நடித்து கொண்டிருப்பதாகவும் இருப்பினும் தேதிகளை பார்த்துவிட்டு அப்டேட் செய்கிறேன் என்றும் பதிலளித்தார். அதோடு திருமாவளவனை கேராளாவிற்கு வந்தால் தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து திருமாவளவனை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)