தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Advertisment

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில், தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், “கல்வியைப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக ஒரு பாண்டிய மன்னன், ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்த பாடலின் கடைசி 4 வரிகள் ரொம்ப முக்கியமானது.  வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே. 

Advertisment

கல்விக்கு இரண்டு குணங்கள் இருக்கிறது. அதில் ஒரு குணம் அந்த பாண்டிய மன்னன் சொல்வது. அது என்னவென்றால், கல்வியை கீழிருப்பவனும் கற்றால் அவனை மேல் இருப்பவனும் மதித்து சேரக்க வேண்டிய கட்டாயம் வரும். இது முதல் காரணம். இரண்டாவது கரணம், விவேக சிந்தாமனி என்ற புத்தகத்தில், ‘வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, மன்னராலும் கொள்ளல் ஆகாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது’. இது என்ன சொல்ல வருகிறதென்றால், ஒருவன் மற்றவனுக்கு ஒரு கோடி கொடுத்தால் அவனால் சந்தோஷமாக வாழ்ந்து விட முடியும். ஆனால் பணம் கொடுத்தவனிடம் ஒரு கோடி இருக்காது. இதுவே கல்வியை கொடுப்பவனையும் அறிவாளியாக வைத்திருக்கும் அதை வாங்கியவனையும் அறிவாளியாக வைத்திருக்கும். இரண்டு பேரையும் சமமாக மாற்றும். இதனால், கல்வியை கற்கக்கூடாது என்று பழங்காலத்தில் இருந்து இப்போது வரை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

கல்வியை கற்று வந்த நாம் ஏன் இடையில் கல்வியை இழந்தோம் என யோசிக்க வேண்டும். கல்வியை சார்ந்து இரண்டு விதமான கருத்தியல் இருக்கிறது. ஒன்று திராவிட கருத்தியல். இன்னொன்று ஆரியக் கருத்தியல். திராவிட கருத்தியல், எல்லாரையும் படிக்க வைத்து அறிவாளியாக்கும். ஆனால் ஆரிய கருத்தியல், கற்க ஆசைப்படுபவனையும் எந்த ஆள் எனக் கேட்டு கற்கவிடாமல் தடுக்கும். இந்த கல்வியை தடுப்பது பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் இருந்து கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார் வரைக்கும் நடந்திருக்கிறது. பாரதியார் கூட கோடி மடங்கு பெரிய புண்ணியம் ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது என சொல்லியிருக்கார். 

Advertisment

சமத்துவம் இருக்கக்கூடாது என சொல்கிற இடத்தில் சமத்துவமும் சமூக நீதியும் இருக்க வேண்டும் என்கிற ஒரு கட்சி, ஆட்சியில் இருக்கும் போது, அவர்கள் படிக்க வைக்க எத்தனை திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அத்தனை திட்டங்களையும் கொண்டு வருகிறார்கள். அதன் மூலம் எப்படியாவது படுத்து விடுங்கள் என சொல்கிறார்கள். ஆனால் இதை எதிர்ப்பவர்கள் புதிய கல்விக் கொள்கை என இங்கே கொண்டு வந்து கல்வியை தடுக்க பார்க்கிறார்கள். இதை ஏற்க மாட்டோம் என சொல்பவர்களுக்கு நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய் 2, 150 கோடி பணத்தைக் கூட தர மாட்டேன் என சொல்கிறார்கள். நமக்கு கொள்கை ரீதியாக முரண்பாடுள்ள ஒரு கட்சி ஒன்றியத்தை ஆளும் போது எந்த உதவியும் இல்லாமல் நம்மை ஆள்கிற முதல்வர், அவர் நீந்துவது மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் கரை சேர்க்கக்கூடிய உழைப்பை செலுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.