ADVERTISEMENT

"மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்த வேண்டும்" - தெருக்குரல் அறிவு

03:02 PM Aug 12, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், மோகன்.ஜி, கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, யுகபாரதி ஆகியோரைத் தொடர்ந்து ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, "சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, இயற்பியல் வேதியியல் கணிதம் எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க!

சாதி எதிர்ப்பு மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும். இடஒதுக்கீடு ஒரு இலவசம், ஆண்ட பெருமைகள், சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும். சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல், எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும் ! சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், "சாதி என்பது ஒரு நோய்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT