Advertisment

“நிலங்கலைப் போல கலையையும் பிடுங்கிவிட்டார்கள்” - தெருக்குரல் அறிவு வேதனை!

therukkural arivu speech in valliammaal peraandi music album reelase event

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு மூலம், பல பாடல்களைப் பாடி கவனம் பெற்றவர் ‘தெருக்குரல்’ அறிவு என்கிற அறிவரசு. மேலும் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடகி தீக்‌ஷிதாவுடன் இவர் இணைந்து பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் யூடியூப்பில் பல கோடி பார்வையாளர்களைக் கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி, ராப் பாடகர் அறிவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'வள்ளியம்மா பேராண்டி' என்ற தலைப்பில் அவர் பாடிய 12 பாடல்கள் கொண்ட முதல் பாகம் ஆல்பம் வெளியானது

Advertisment

ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் ஆண்டனி தாஸன் மற்றும் 'தெருக்குரல்' அறிவு உடன் ஆல்பம் பாடல்களை பாடிய பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் தெருக்குறள் அறிவு பேசுகையில், “வள்ளியம்மாள் வரலாறு என்பது மிக முக்கியமானது. 1823ல், இங்கு இருக்கிற லட்சக்கணக்கான மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தேயிலை தோட்ட வேலைக்காக இலைங்கைக்கு அழைத்துப் போனார்கள். பின்பு அந்த மக்களின் விடுதலைக்கு பிறகு, அங்கேயே விட்டுவிட்டு போய்விட்டார்கள். அவர்களை இலங்கை அரசு இந்தியாவிற்கே மீண்டும் திருப்பி அனுப்பியது. அப்போது குடும்பங்கள் கட்டாயமாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்டு, பேரிழந்து, ஊரிழந்து மீண்டும் உழைப்பாலும், கல்வியாலும், நேர்மையாலும் மீண்டெழுந்த ஒரு மகத்தான குடும்ப தலைவி தான் வள்ளியம்மாள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொருவரும் சில விஷயங்களை பெருமையாக சொல்வார்கள். ஒருவர் சாதி என்பார்கள், ஒருவர் பணம் என்பார்கள். அப்படி கேட்கும் போதெல்லாம் எனக்கு என்ன பெருமை இருக்கிறது என்பதை யோசித்து பார்ப்பேன். எங்க அப்பா ஒரு பேராசிரியர், அம்மா ஒரு ஆசிரியர். அது அவர்களின் உழைப்பால் அடைந்திருக்கிற உயரம். ஆனால் எங்களுடைய வரலாறு நசுக்கப்படும் போது, அது முழைந்து எழுவதற்காக உழைத்திருக்கும் அந்த உழைப்பு தான் என்னுடைய அடையாளம்.

Advertisment

எங்க தாத்தா தெருவில் செருப்பு போட்டு நடக்க முடியாது. ஆனால் நாங்க இன்று விமானத்தில் பறக்கிறோம். கார்களில் போகிறோம். இது சாதரண மாற்றம் இல்லை. இதில் பாபாசாகேப் அம்பேத்கரில் தொடங்கி இன்று பா.ரஞ்சித் வரை எங்களுடைய பங்களிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய உழைப்பினால் மட்டுமே தான் இந்த துறையில் நான் இருப்பதாக நம்புகிறேன்.

எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே இல்லை. ஏனென்றால் நாம் எப்போது கொல்லப்படுவோம் என்றே தெரியாத ஒரு வன்முறையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு பட்டியலின மனிதனாக வாழ்க்கையில் கொண்டாட்டங்களைக் கூட நாம் கொண்டாட முடியவில்லை. தினந்தோறும் இறப்பு செய்தியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். உன் சமூகம் சார்ந்த, உன் நிறத்தில் இருக்கிற, நீ சாப்பிடுகிற உணவை சாப்புடுகிற, உன்னைப் போல் யாரோ ஒருவர் இறந்துகொண்டே இருக்கும் போது, நீ எப்படி பிறந்தநள் கொண்டாட முடியும், ஒரு பாட்டு வெளியீட்டை கொண்டாட முடியும். உன் மனது எப்படி இருக்கும். அந்த மனநிலை ரொம்ப ரொம்ப ஆபத்தானது. இந்தச் சாதிய சமூகம் அது மாதிரியான இருக்கத்திலே வைத்திருக்கிறது. அந்த இருக்கம் தான் என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.

ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடைய மறைவு இதுவரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பட்டியலின மக்கள் கொலை செய்யப்படுவதை ஒவ்வொரு நாளும் நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அடிப்படை விஷயங்களில் ஆரம்பித்து எல்லாமே பிரச்சனையாக இருக்கும் போது இசை என்பது எங்கேயோ இருக்கிறது. இசை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இது அனைத்துமே மேட்டுக்குடிகள் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டதன் விளைவாகத்தான், எத்தனையோ முன்னோர்களின் கனவு வீணாகிப் போனது. இந்தச் சாதிய சமூகம் தான் இந்த மண்ணின் கலைஞர்களை மீண்டும் மீண்டும் அடியிலே வைத்துக் கொள்கிறது. அவர்களுடைய வாழ்க்கையில் தான் அழகு, கொண்டாட்டங்கள் இருக்கிறது. யார் ஒருவர் இந்த மண்ணில் வேர்வை சிந்தி உழைக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் மண்ணின் செடியை பற்றித் தெரியும். அவர்கள் தான் செடியை பற்றி பாட்டு எழுத முடியும். இந்தக் கலை வடிவங்களை, நம்மிடமிருந்து எப்படி நிலங்களை பிடிங்கிக் கொண்டார்களோ, அதே மாதிரி கலைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இப்படியான சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எனக்கு அடையாளமாக இருக்கக் கூடிய வள்ளியம்மாளை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த ஆல்பம்” என்றார்.

therukural arivu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe