Advertisment

“இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது...” - நடிகர் கார்த்தி பேச்சு! 

There is still expectation for romantic films Actor Karthi speaks

Advertisment

செவன் மைல்ஸ் பெர் செகண்ட்(7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய என். ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இங்கே வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் சேர்ந்த போது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான்.. பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தான்.. மணி சார் தாங்க முடியாமல், “டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா” என்று சொன்னார். இங்கே வந்தும் பார்க்கிறேன்.. அதே வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது.. இங்கேயும் லைட்டை திருப்புங்க.. கதவை மூடுங்க என.. “டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா”... (சித்தார்த்தை பார்த்து கூறுகிறார்).

Advertisment

என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த அந்த சமயத்தில் தான் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள். சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது, அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பென்ச் தான் போல இருக்கிறதே. இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே. நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது. சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, நிறைய படிக்க வேண்டும்.. கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் கத்துக்கிட்டேன் என்று சொல்லலாம்.

இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’.. ‘மிஸ் யூ’.. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன.. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக எடுத்து, ஒரு லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து நான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இது இருக்கிறது.

எனக்கு விஜய் சார் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.. பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் தினேஷ் நடன வடிவமைப்பில் சித்தார்த் நன்றாகவே ஆடி இருந்தார். பாடல்கள் நன்றாக இருந்தது. பார்ப்பதற்கு நான் படித்த காலத்தில் இருப்பது போன்று சிம்பிளாக இருந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாமல் சித்தார்த் ஒத்துக் கொள்ள மாட்டார். இந்த படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் அவ்வளவு திறமையுடன் மொழி தெரியாவிட்டாலும் சின்சியராக இருக்கிறார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினியும் குறும்படம் பார்த்ததிலிருந்து பாலசரவணனை பார்த்து யார் அந்த பையன், இப்படி பின்னுகிறானே என யோசித்து இருக்கிறேன். அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவது ரொம்பவே கஷ்டமான விஷயம். கொஞ்சம் மீறினாலும் கொட்டாவி விட்டு விடுவார்கள். அப்பாவித்தனத்துடன் சேர்ந்து நகைச்சுவையையும் வெளிப்படுத்தியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதன் பிறகு லப்பர் பந்து என அவர் நடித்த படங்களில் எல்லாம் எல்லா பஞ்ச்சுகளும் சரியான விதத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும். பாலசரவணன் உங்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. நாம சீக்கிரம் ஒண்ணா ஒர்க் பண்ணுவோம். பசங்க கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நிச்சயமாக அது நடக்கும் என நம்புகிறேன்.

நானும் கருணாவும் இப்போதுதான் வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்து வந்தோம். அவ்வளவு அழகாக காமெடி வசனங்களை டெலிவரி பண்ணுகிறார். நான் எதுவுமே கத்துக்காமல் சினிமாவுக்கு வந்து, இங்கே தான் கத்துக்கிட்டேன். ஆனால் இன்று எல்லோரும் ஷார்ட் பிலிமில் அசத்துகிறார்கள். வரும்போதே தயாராகி வருகிறார்கள். ஜிப்ரான் நாம் இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம். இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும்.. அதை புரமோட் செய்த விதமாகட்டும். அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது. சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது” என்று கூறினார்.

sidharth actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe