
நீண்ட இடைவேளைக்கு பிறகு சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நாயகனாக சத்யராஜ் நடித்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது?
மருத்துவத்துறையில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் சத்யராஜ், வில்லன் மதுசூதனனின் மகனை கடத்தி வைத்துக்கொண்டு வில்லனிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பிறகு வில்லனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவரது மகனின் பிறப்புறுப்பை வெட்டி வைத்துக்கொண்டு வில்லன் மகனை மட்டும் மயக்க நிலையில் வில்லனிடம் ஒப்படைக்கிறார். வில்லன் மதுசூதனன் அவரது மகனை மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு மருத்துவர்கள் வில்லன் மகனுக்கு மயக்கம் தெரிவதற்கு முன் அவரது பிறப்புறுப்பு கிடைத்தால் மட்டுமே மகனை காப்பாற்ற முடியும் என்று வில்லன் மதுசூதனனிடம் தெரிவித்து விடுகின்றனர். இதையடுத்து மதுசூதனன் சத்யராஜை வலைவீசி தேடுகிறார். வில்லன் கையில் சத்யராஜ் சிக்கினாரா இல்லையா? இறுதியில் வில்லன் மகனுக்கு பிறப்புறுப்பு கிடைத்ததா இல்லையா? சத்யராஜ் ஏன் அவரது பிறப்புறுப்பை மட்டும் வெட்டினார்? என்பதே தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் மீதி கதை.
ரேப்பிஸ்டுகளின் பிறப்புறுப்பை வெட்டுவது மட்டுமே அவர்களுக்கான சரியான தண்டனை என்ற கருத்தை ஒற்றை வரி கதையாக வைத்து, அதனை அரதப்பழசான திரைக்கதை மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் தீரன். கதை சொன்ன விதத்தையும், அதை காட்சிப்படுத்திய விதத்தையும் தெளிவாக கையாண்ட இயக்குநர் திரைக்கதையில் ஏனோ கோட்டை விட்டுள்ளார். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஆன கேட் அண்ட் மவுஸ் விளையாட்டை சரியான முறையில் அமைத்துள்ள இயக்குநர் அதை ரசிக்கும்படி கொடுக்க தவறியுள்ளார். வில்லன் நாயகனை தேடி செல்லும் காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் கிளிஷேவான திரைக்கதை சில இடங்களில் அயர்ச்சியை தந்துள்ளது.
சத்யராஜ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதி நாயகனாக நடித்து கைத்தட்டல் பெற்றுள்ளார். இவரது அனுபவ நடிப்பு உணர்ச்சிபூர்வமான காட்சிகளை நெகிழ்ச்சியாக மாற்றியுள்ளது. அதுவே படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் பாஸ் ஆகிறார். இவருக்கும் இவரது காதலர் யுவனுக்குமான காட்சிகளை விட சத்யராஜ் உடனான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்மிருதி வெங்கட் காதலர் யுவனின் அப்பாவாக நடித்திருக்கும் சார்லி எப்போதும் போல் சிறப்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார்.
வில்லன் மதுசூதனன் மகனை தொலைத்த தந்தையின் பரிதவிப்பிலும், கொலைகுற்றம் செய்யும் பயங்கர வில்லத்தனத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருடன் நடித்துள்ள பாண்டி செல்வம் அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனைவரும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
கருடவேகா ஆஞ்சியின் ஒளிப்பதிவில் இன்டோர் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. பிரசாத் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. சென்டிமெண்ட் காட்சிகளில் இசையால் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
பெண்களுக்கெதிரான குற்றச்செயல்களுக்கான தண்டனை குறித்து விவாதிக்கும் இப்படம், கதை சொல்லப்பட்ட விதத்தால் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தடுமாறியிருக்கிறது.
தீர்ப்புகள் விற்கப்படும் - விழிப்புணர்வு!