/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Ranji.jpg)
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம்‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி3 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது...
“இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குநர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன்.அவர் இந்த கதையைப் பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன். பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாகத்தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார்.
இந்தக் கதையை படிக்கச் சொன்னபோது பலரும் இந்தப் படம் குறித்து நெகட்டிவாகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையைக் கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)