
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலாக முன்பு வெளியான ‘ஜிங்குச்சா’ மற்றும் அண்மையில் வெளியான ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கமல், இப்படம் திரையரங்க வெளியீட்டுக்கு பின் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியாகும் என கூறியிருந்தார்.
அவர் பேசியதாவது, “இது ஒரு பரிசோதனை முயற்சி கூட அல்ல, ஒரு நடைமுறைக்கான விஷயம். ஓ.டி.டி. நிறுவனம் இதை ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இருவரும் அமர்ந்து பேசினோம். அது பேச்சு வார்த்தை அல்ல, அது ஒரு திட்டம். இது போல் மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம். இது சினிமா துறைக்கு ஒரு ஆரோக்கியமான விஷயம். இதைச் செய்த முதல் நபர் நாங்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். இப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் தக் லைஃப் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியாவது, திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவை அனைத்து பட தயாரிப்பாளர்களும் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் ஒரு கோரிக்கை எழுந்து வந்தது. ஒரு திரைப்படம் 4 வாரங்கள் கழித்து ஓ.டி.டி. வெளியிட்டு வருவதால் திரையரங்க வசூல் பாதிப்பு பாதிக்கிறது, அதனால் ஓ.டி.டி. வெளியீட்டை 8 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி வந்ததாக தகவல்கள் வெளியானது. அது தற்போது கமல் படம் மூலம் நடைமுறைக்கு வரவுள்ளது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.