Skip to main content

சென்னையில் நாளை வழக்கம் போல் திரையரங்குகள் இயங்கும்  

Published on 15/03/2018 | Edited on 16/03/2018
abirami


தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 8 சதவீத கேளிக்கை வரிவிதிப்பு, திரையரங்கு உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர். அப்போது கூட்டம் முடிந்து திரையரங்கம் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில்...."சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும்" என்று தெரிவித்தார். இதற்கிடையே தற்போது நடந்த பெப்சி சம்மேளன கூட்டத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது. எனவே  சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அறிக்கையின் எதிரொலியாக ஸ்ட்ரைக்கிற்கு எதிராக இவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்பது மிகவும் எதிர்பார்ப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்